Published : 02 Dec 2022 11:00 AM
Last Updated : 02 Dec 2022 11:00 AM
சான் ப்ரான்சிஸ்கோ: மனித மூளைக்குள் சிப் பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்துவதை விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் தான் இதனை மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மனிதர்கள் மனதில் நினைப்பதை கணினி வழியாக வெளிப்படுத்த முடியும். இந்த சிப்பை தானே பொருத்திக் கொள்ளவும் எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக எலான் மஸ்க், "நாங்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இது தொடர்பான ஆய்வறிக்கைகளை எழுத்துபூர்வமாக சமர்ப்பித்துவிட்டோம். இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும். நாங்கள் மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார்.
இந்த நியோரோலிங்க் சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவை ஒத்து இருக்கிறது. இவற்றை குரங்குகளில் மண்டை ஓட்டில் பொருத்தியபோது குரங்குகளால் சில அடிப்படை வீடியோ கேம்களை விளையாட முடிந்தது. இந்த சிப் மூலம் மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும். தசைகளை அசைக்கக் கூட முடியாத நோய் பாதிப்பில் உள்ளவர்களால் நியூரோலிங்க் மூலம் சாதாரண நபர்களைவிட வேகமாக மொபைல் போனை இயக்க முடியும். தீவிர முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முழு உடல் செயல்பாட்டையும் நியோரோலிங்க் மூலம் மாற்ற முடியும். பார்கின்சன் போன்ற பல்வேறு நரம்பியல் நோய்களுக்கும் இது தீர்வாகும் என்று கூறப்படுகிறது. நரம்பியல் நோய் சிகிச்சையில் இந்த நியூராலிங் பெரும் புரட்சி செய்யும் என்று அதன் ஆராய்ச்சியாளகள் கூறுகின்றனர். அதாவது மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அதனை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்ய வைக்கமுடியும் எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சிக் குழுவினர். இந்த நியூரோலிங் சிப் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT