Published : 24 Nov 2022 08:36 PM
Last Updated : 24 Nov 2022 08:36 PM
ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளூ டிக் சந்தா கட்டணத்தை ஐந்து நாட்களில் சுமார் 1.4 லட்சம் பயனர்கள் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மென்பொருள் வல்லுனர் ஒருவர் பகிர்ந்த தரவுகளின் அடிப்படையில் சில முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றுதான் ‘ப்ளூ டிக்’ அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் அதற்கென மாதந்தோறும் கட்டண சந்தா வசூலிப்பது. அது ஒரு பக்கம் விவாதத்தை எழுப்பி இருந்தது. ஆனாலும் தன் முடிவில் மஸ்க் உறுதியாக இருந்தார். அதையடுத்து குறிப்பிட்ட சில நாடுகளில் ப்ளூ டிக் பயனர்கள் இடத்தில் சந்தா வசூலிக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், மென்பொருள் வல்லுனர் ஒருவர் கம்ப்யூட்டர் புரோகிராமை பயன்படுத்தி ப்ளூ டிக் சந்தா செலுத்திய விவரங்களை திரட்டியதாக தெரிகிறது. பயனர்களின் பாலோயர்கள் விவரம், ஸ்க்ரீன் டைம், ட்விட்டர் தளத்தில் இணைந்த தேதி மற்றும் வெரிபிகேஷன் நிலை போன்றவற்றை அவர் இதில் திரட்டியுள்ளார்.
அதில் ஒரு பயனர் வெறும் 560 பாலோயர்களை மட்டுமே பெற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சில செய்தி தளங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான ப்ளூ டிக் சந்தாதாரர்கள் சுமார் 5,000 தீவிர வலதுசாரி ட்விட்டர் கணக்குகளுடன் லிங்க் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT