Published : 03 Oct 2022 09:19 PM
Last Updated : 03 Oct 2022 09:19 PM

விமானப் படையில் இணைக்கப்பட்ட உள்நாட்டு இலகு ரக ஹெலிகாப்டர்கள்: சிறப்பு அம்சங்கள்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்.

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைப்பட்டன. இந்த விமானத்திற்கு 'பிரசண்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘பட்டாம்பூச்சி போல பறக்கிறது. தேனீயை போல கொட்டுகிறது’ என ஹெலிகாப்டரை இயக்கிய விமானி ஒருவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இதனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்காக அர்ப்பணித்து உள்ளார்.

பாதுகாப்பு துறையில் தற்சார்பை அடைவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.

பின்னர் பேசிய அவர், “எதிர்காலத்தில் இந்திய விமானப் படை உலகின் முதன்மையான படையாகத் திகழும்” என்று கூறினார். அத்துடன், “பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் நாடு முழு தற்சார்பை அடையும்” என்று அவர் தெரிவித்தார். பின்னர் இலகு ரக ஹெலிகாப்டரில் சிறிது நேரம் அவர் பயணித்தார்.

“இந்த ஹெலிகாப்டரின் இயக்கத்தை வருணிக்க முகமது அலியின் பிரபலமான மேற்கோளை தான் பயன்படுத்த வேண்டும். இது பட்டாம்பூச்சியை போல பறக்கிறது. தேனீயை போல கொட்டுகிறது. மிகவும் கவனத்துடன் திட்டமிட்டு அனைத்து விதமான காலநிலைக்கும் ஏற்றபடி இதன் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று விங் கமாண்டர் சவுரப் சர்மா தெரிவித்துள்ளார்.

“நம் நாட்டுக்கு இது முக்கியமான நாளாக அமைந்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளன. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்” என்று தனுஷ் ஸ்குவாட்ரானின் அனுஜ் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் குறித்த சில தகவல்கள்: ஏவுகணைகள், பிற ஆயுதங்களைச் சுடும் திறன்கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், எதிரிகளின் வான்வழித் தாக்குதலைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, 5,000 மீட்டர் உயரத்திலிருந்து தரையிரங்கும் திறன் கொண்டது.

தற்போது 15 ஹெலிகாப்டர்களை நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 10 ஹெலிகாப்டர்கள் விமானப் படைக்கும், 5 ஹெலிகாப்டர்கள் ராணுவத்திற்கும் சேருமாம். முதற்கட்டமாக இப்போது 4 ஹெலிகாப்டர்கள் விமானப் படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x