Published : 30 Sep 2022 06:13 AM
Last Updated : 30 Sep 2022 06:13 AM
புதுடெல்லி: 5ஜி சேவையை வழங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் (டிஐஏஎல்) செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது:
5ஜி சேவைக்கான செல்போன் மற்றும் சிம் கார்டுடன் வரும் விமானப் பயணிகளுக்கு புது அனுபவம் காத்திருக்கிறது. அவர்கள் 5ஜி சேவையை பெறுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
குறிப்பாக, சிறப்பான சிக்னல் வலிமை, தடையற்ற இணைப்பு, மிக விரைவான டேட்டா வேகம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது வை-ஃபை மூலமாக கிடைக்க கூடியதைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமான டேட்டா வேகத்தில் 5ஜி சேவையை பயணிகள் பெற முடியும். டெர்மினல்-3 மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த அதிவேக சேவை விரைவில் நடைமுறைக்கு வரும்.
தற்போது, ஒரு சில தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (டிபிஎஸ்) மட்டுமே தங்களின் வாடிக்கையாளர்களுக்காக 5ஜி சேவைக்கான வசதியை ஏற்படுத்தியுள்ளனர். அடுத்த சில வாரங்களில் இதர டிஎஸ்பி நிறுவனங்களும் இந்த பணியை செய்து முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் பயணிகளை கையாள்வது, அவர்களது உடைமைகள் மேலாண்மை மற்றும் விமான நிலைய செயல்பாடு ஆகியவற்றில் 5ஜி சேவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டிஐஏஎல் தலைமைச் செயல் அதிகாரி விதேஷ் குமார் ஜெய்புரியார் கூறுகையில். “புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் டெல்லி விமான நிலையம் தொடர்ந்து முன்னோடியாக திகழ்கிறது. பயணிகள் புதிய அனுபவத்தை உணர 5ஜி உள்கட்டமைப்புகளை சொந்தமாக உருவாக்கியுள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT