Published : 21 Aug 2022 09:58 PM
Last Updated : 21 Aug 2022 09:58 PM
புனே: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இன்று (ஆகஸ்ட் 21) புனேயில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் -ஆல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை அறிமுகப்படுத்தினார்.
“பிரதமர் மோடியின் ஹைட்ரஜன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ற வகையில் மலிவான மற்றும் அணுகக்கூடிய தூய்மையான எரிசக்தியில் இயங்கக்கூடியதாக இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இது சுத்திகரிப்பு தொழில், உரத் தொழில், எஃகுத் தொழில், சிமெண்ட் தொழில் மற்றும் கனரக வணிகப் போக்குவரத்து துறையில் இருந்து உமிழ்வை குறைக்க உதவுகிறது.
எரிபொருள் செல், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு, நீர் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த போக்குவரத்து முறையாக மாறும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நீண்ட தூர வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது. இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன.
எரிபொருள் செல் வாகனங்களின் அதிக செயல்திறன் மற்றும் ஹைட்ரஜனின் அதிக ஆற்றல் அடர்த்தி ஆகியவை எரிபொருள் செல் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செயல்பாட்டு செலவு டீசலில் இயங்கும் வாகனங்களை விட குறைவாக இருப்பதை உறுதி செய்வதாக ஜிதேந்திர சிங் கூறினார். மேலும் இது இந்தியாவில் சரக்கு புரட்சியை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.
கேபிஐடி-சிஎஸ்ஐஆர்-இன் கூட்டு முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொழில்நுட்பத் திறன் உலகிலேயே மிகச் சிறந்ததாகவும், மிகக் குறைந்த செலவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment