Published : 19 Oct 2016 12:44 PM
Last Updated : 19 Oct 2016 12:44 PM
| புகைப்படங்கள் மூலம் புகைப்பட தேடலில் உதவும் புதுமையான தேடியந்திரங்கள் |
இணையத்தில் எண்ணற்ற முறை நீங்கள் புகைப்படங்களை அல்லது உருவப்படங்களை தேடியிருக்கலாம். பெரும்பாலான முறை நீங்கள் எதிர்பார்த்த படங்கள் கிடைத்திருக்கலாம். படங்களை தேட கூகுள் உள்ளிட்ட பொது தேடியந்திரங்களையே பயன்படுத்தலாம். தேடல் முடிவுகளை பட்டியலிடும்போது அவற்றின் வகைகளில் படங்களும் தனியே இடம்பெற்றிருக்கும்.
ஆனால், சில நேரங்களில் படங்களை தேட இன்னும் சிறந்த வழி இருக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். அதாவது, வழக்கமான முறையில் முன்வைக்கப்படும் படங்களின் பட்டியல் ஏமாற்றம் அளிக்கும்போது இவ்வாறு தோன்றலாம்.
தலைகீழ் தேடல்
இதுபோன்ற நேரங்களில் நீங்கள் நாட வேண்டியது தலைகீழ் பட தேடியந்திரங்களை தான்! புகைப்படங்களை புகைப்படங்களை கொண்டே தேடித்தரும் தேடியந்திரங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் இது ரிவர்ஸ் இமேஜ் சர்ச் என குறிப்பிடப்படுகிறது. இந்த தேடியந்திரங்களில் தேட குறிச்சொற்களை டைப் செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக ஒரு படத்தை உள்ளீடு செய்து, அந்தப் படத்தின் வேறு வடிவங்களை அல்லது அதேபோன்ற படங்களை தேடிக்கொள்ளலாம். இந்த வசதி அளிக்க கூடிய சாத்தியங்களும் பலன்களும் வியக்க வைப்பவை!
படங்களை தேட இப்படி ஒரு வசதி இருப்பது பெரும்பாலானவர்கள் அறியாமலே இருக்கின்றனர். கூகுள் தேடியந்திரத்திலேயே தலைகீழ் பட தேடல் வசதி இருந்தும் கூட, இதை கணிசமானவர்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியம்தான். இதற்கு முக்கிய காரணம், தலைகீழ் பட தேடல் என்பது கொஞ்சம் பிரத்யேகமானது. அதற்கான தேவையை நீங்கள் உணர வேண்டும். உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர் படம் தேவை எனில், தேடியந்திரத்தில் சச்சின் என டைப் செய்துவிட்டு, உருவங்கள் வகையில் கிளிக் செய்தால் போதும்; சச்சின் தொடர்பாக ஆயிரக்கணக்கான படங்கள் வந்து நிற்கும். அவற்றில் சச்சினுக்கு தொடர்பில்லாத படங்களும் இருக்கலாம் என்றாலும், பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம். படங்களின் அளவு மற்றும் துல்லியம் போன்ற அம்சங்களை குறிப்பிட்டு தேடலை தீவிரமாக்கி கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
இது வழக்கமான தேடல். இப்போது, சச்சினின் குறிப்பிட்ட ஒரு தோற்றம் உங்களுக்கு தேவை என வைத்துக்கொள்வோம். அதே படத்தை தேடுவது எப்படி? அந்த படம் கூட உங்களிடம் இருக்கிறது, ஆனால் அதன் மூல வடிவம் அல்லது அந்த படம் முதலில் வெளியான இடம் எது என்பதை அறிய வேண்டிய தேவை இருக்கிறது எனும் சூழலில், இணையத்தில் தேடிப்பாருங்கள், எத்தனை ஏமாற்றம் ஏற்படுகிறது என புரியும். அந்தப் படத்தை விவரிக்க கூடிய குறிச்சொற்களை மாறி மாறி டைப் செய்து தேடினாலும், பலன் இருக்காது. விதவிதமான சச்சின் படங்கள் வந்து நிற்குமே தவிர நீங்கள் வைத்துள்ள அந்த படம் வந்து நிற்காமல் போகலாம்.
டிஜிட்டல் குறிப்புகள்
குறிச்சொற்கள் சார்ந்த தேடலின் போதாமை இது. பொதுவாக தேடலின்போது டைப் செய்யப்படும் குறிச்சொற்கள் கொண்ட இணைய பக்கங்களை எல்லாம் பட்டியலிட்டு, அவற்றில் பொருத்தமான பக்கங்களை வரிசைப்படுத்தி தேடியந்திரங்கள் முன்வைக்கின்றன. புகைப்படங்கள் அல்லது உருவங்களை தேடும் போதும் அவை தொடர்பான விவரங்களை கொண்டே தேடியந்திரங்கள் செயல்படுகின்றன. படத்தின் தலைப்பு, அவற்றுக்கான பட குறிப்பு, தொடர்புடைய சொற்கள் போன்றவற்றை எல்லாம் கொண்டே படங்களை தேடி கொண்டு வந்து கொட்டுகின்றன. இவை மெட்டா டேட்டா என சொல்லப்படுகின்றன. பல நேரங்களில் இந்த மெட்டா டேட்டா போதுமானதாக இல்லாமல் போகலாம். உதாரணத்திற்கு தலைப்பிடப்படாத படம் அல்லது படக்குறிப்பு இல்லாத படம் தேடியந்திர சிலந்தியின் பார்வைக்கு படாமலே போய்விடலாம். எனவே தான் படங்களையும், உருவங்களையும் தேட குறிச்சொற்கள் எப்போதும் போதுமானதல்ல.
ஆனால் படங்களை வேறு எப்படி தேடுவது? இந்த கேள்விக்கான பதில் தான் தலைகீழ் பட தேடல்! அதாவது, குறிச்சொற்களை கொண்டு தேடாமல், படங்களை அவற்றின் டிஜிட்டல் கைரேகைகளை கொண்டே தேடுவது.
கூகுளில் இந்த தேடல் வசதி இருக்கிறது என்றாலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தலைகீழ் பட தேடல் வசதியை முதலில் அறிமுகம் செய்தது கூகுள் அல்ல: இந்த பிரிவில் சிறந்தது என்று சொல்லக்கூடியதும் அல்ல - இரண்டுக்கும் சொந்தம் கொண்டாடக்கூடியது 'டைனிஐ' தேடியந்திரம். இதுவே 2008-ம் ஆண்டில் தலைகீழ் தேடல் வசதியை முதலில் அறிமுகம் செய்தது. உருவப்படங்களை இப்படி தான் தேட வேண்டும் என 'டைனிஐ' உணர்த்தி இணைய உலகை வியக்க வைத்து, இந்த வகை தேடலை ஓரளவு பிரபலமாக்கிய பிறகே கூகுள் 2011-ல் இந்த வசதியை அறிமுகம் செய்தது.
டைனிஐ மாயம்
இணையத்தில் குறிச்சொல் அல்லது துணை தகவல்களை சாராமல், உருவங்களை அடையாளம் காணும் நுட்பம் கொண்டு செயல்படும் முதல் உருவங்களை உணரும் தேடியந்திரம் என்று வர்ணித்துக்கொள்ளும், 'டைனிஐ' கனடா நாட்டில் இருந்து அறிமுகமானது. இதில் குறிப்பிட்ட ஒரு படத்தை பதிவேற்றி அல்லது அந்த படத்தின் இணைய முகவரியை குறிப்பிட்டு அதே படத்தின் பிற தோற்றங்களை தேடலாம். இந்த வசதி மூலம், தேடப்படும் படம் இணையத்தில் வேறு எங்கெல்லாம் வெளியாகி இருக்கிறது என்பதில் துவங்கி, அது முதலில் வெளியான இடம், அதன் மாறுபட்ட தோற்றங்கள், துல்லியமான வடிவம் ஆகியவற்றுக்கான படங்களை பெறலாம்.
டைனிஐ, உருவங்களை உணரும் நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது. ஒரு படத்துக்கான டிஜிட்டல் கையெழுத்தை உருவாக்கி கொண்டு அந்த கையெழுத்தின் அசம்ங்களை கொண்ட படங்களை எல்லாம் பட்டியலிடுகிறது.
ஆய்வு நோக்கில் அணுகும்போது இந்த வசதி அற்புதமாக இருக்கும். அதேபோல புகைப்பட கலைஞர்கள் தங்கள் படங்கள் இணையத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது காப்புரிமை மீறலை கண்டறிவது சாத்தியம்.
சிறிய அளவில் துவங்கிய டைனிஐ படிப்படியான தன்னை மேம்படுத்திக்கொண்டே வந்திருக்கிறது. ஆரம்பத்தில் அதன் வசம் பெரிய அளவில் ஒப்பீட்டிற்கான படங்களின் அட்டவணை இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்து, ஒரு கட்டத்தில் 200 கோடி படங்களின் பட்டியலை கொண்டிருப்பதாக பெருமைப்படும் நிலையை எட்டி, தற்போது 1620 கோடிக்கும் அதிகமான படங்களை அட்டவணையில் இருந்து தேடித் தருவதாக சொல்கிறது. வெளியான காலத்தின் அடைப்படையிலும் படங்களின் தேடலை கூர்மையாக்கலாம். சமீபத்தில் வெளியான படம், மிகவும் பழைய படம் என்றெல்லாம் தேடலாம். அளவில் பெரிய படம், அதிக மாறுதலுக்கு உள்ளான படம் என்றும் தேடலாம். இவைத் தவிர, படங்களில் உள்ள வண்ணங்கள் சார்ந்தும் தேட முடியும். குறிப்பிட்ட படம் எங்கே பயன்படுத்தப்படுகிறது எனும் எச்சரிக்கை தகவலை பெறும் வசதியும் இருக்கிறது. பயனர்களிடம் உள்ள பட்டியலில் இருந்தும் படங்களை தேடலாம். தொடர்ந்து புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வளர்ந்து வரும் தேடியந்திரமாக இருக்கிறது. இதன் அடிப்படை தேடல் இலவசமானது. ஆனால் வர்த்தக் நோக்கில் பயன்படுத்த கட்டணம் உண்டு.
கூகுள் தேடல்
கூகுள் இந்த பிரிவில் சற்று தாமதமான வரவு என்றாலும், அதன் தலைகீழ் பட தேடல் வசதி விரிவானதாகவே இருக்கிறது. அதன் வசம் உள்ள படங்களின் பட்டியல் டைனிஐயை விட பெரியது. டைனிஐ, குறிப்பிட்ட படத்தின் மூல படம் மற்றும் வேறு வடிவங்களை மட்டுமே தேடித்தருகிறது. பெரும்பாலும் அதேபோன்ற படங்களை தேடித்தருவதில்லை. கூகுள் குறிப்பிட்ட படம் போலவே இருக்கும் படங்களையும் முன்வைக்கிறது. அந்தப் படம் தொடர்பான துணை தகவல்களையும் கூகுளில் அறியலாம்.
கூகுள் இமேஜஸ் வசதியை கிளிக் செய்து அதன் தேடல் கட்டத்தில் உள்ள கேமரா ஐகானை கிளிக் செய்து புகைப்படத்தை பதிவேற்றி தேடலில் ஈடுபடலாம். டைனிஐயுடன் ஒப்பிடும்போது கூகுள் தேடலில் கூடுதல் அம்சங்களும் உண்டு, போதாமைகளும் உண்டு. டைனிஐயில் படங்கள் கொஞ்சம் பழமையானதாக இருக்கலாம். ஆனால் கூகுள் தேடலில் பழைய படம், புதிய படம் என்றெல்லாம் தேட முடியாது.
இரண்டு தேடியந்திரங்களின் வசதியையும் பிரவுசர் நீட்டிப்பாக பயன்படுத்தலாம். மொபைல் போனிலும் பயன்படுத்தலாம். இந்த இரண்டு தேடியந்திரங்கள் தவிர மைக்ரோசாப்ட்டின் பிங் தேடியந்திரமும் தலைகீழ் பட தேடலை வழங்குகிறது. ஆனால் இதற்கான பிங்கின் நுட்பம் அத்தனை சிறப்பானதல்ல என்ற கருத்து இருக்கிறது. ரஷ்ய தேடியந்திரமான யாண்டெக்சும் இந்த வசதியை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் சிறந்து விளங்குவதால் யாண்டெக்சின் தேடல் நுப்டம் சிறந்த்தாக இருப்பதாக கருதப்படுகிறது. வோல்பிராம் ஆல்பாவிலும் இதற்கு நிகரான வசதி இருக்கிறது.
இன்னும் இருக்கு!
இவைத் தவிர ரெவ்ஐஎம்ஜி, இமேஜ்பிரீப், இமேஜ் ரைடர், பிக்ஸி உள்ளிட்ட தேடியந்திரங்களும் இந்த வசதியை அளிக்கின்றன. இவற்றில் இமேஜ்ரைடரிடம் சொந்த தேடல் நுட்பம் கிடையாது. கூகுள், பிங் மற்றும் யாண்டெக்ஸ் தேடல் முடிவுகளை தொகுத்து தருகிறது. ரெவ்ஐஎம்ஜி தனக்கென சொந்தமான தேடல் நுட்பம் கொண்டிருக்கிறது. உருவங்களை தேடுவது தொடர்பான பல்வேறு அம்சங்களை அளிக்கிறது. இதன் மூலம் படங்களை தேடுவதோடு, குறிப்பிட்ட படம் எடுக்கப்பட்ட இருப்பிடத்தையும் அறியலாம். பிக்ஸி தேடியந்திரத்தை பெரும்பாலும் புகைப்பட பயன்பாட்டு திருட்டை கண்டறிய பயன்படுத்தலாம். இமேஜ்பிரீப் புகைப்படங்களை விற்பது மற்றும் வாங்குவதற்கான மேடையாக இருக்கிறது. கர்மாடிகே புகழ் பெற்ற ரெட்டிட் தளத்தில் உள்ள படங்களை தேடுவதற்கான தேடியந்திரமாக இருக்கிறது.
புகைப்படங்களை அவற்றின் டிஜிட்டல் கைரேகை அம்சங்களை மையமாக கொண்டு தேடுவது வளர்ந்து வரும் நுட்பமாக இருக்கிறது. இந்த நுட்பத்தின் அடுத்த கட்டமாக முகம் உணர் தொழில்நுட்பம் அமைகிறது. இந்த திசையில் தீவிர ஆய்வுகளு நடைபெற்று வருகின்றன.
பயன்கள் பலவிதம்!
நிற்க, இந்த வகை தேடல் வசதி பிரதானமாக புகைப்பட ஆய்வாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு அதிகம் பயன்படக்கூடியது போல தோன்றினாலும் சாமானிய இணையவாசிகளும் இதை பலவிதமாக பயன்படுத்தலாம். முதலில் குறிப்பிட்ட படத்தின் துல்லியமான வடிவை தேடிக்கொள்ளலாம். அதன் மூலத்தை அறிந்து காப்புரிமை பெற்று பயன்படுத்தலாம். அதைவிட முக்கியாக இணையத்தில் சர்ச்சைக்குரி படங்கள் உலாவரும் போது, தலைகீழ் தேடலுக்கு உட்படுத்தி அவற்றின் மூலத்தை அறிந்துகொள்ளலாம். சூறாவளி அல்லது கலவரங்களின்போது திடிரென தலைகாட்டும் படங்கள் உண்மையில் எப்போது எங்கே எடுக்கப்பட்டவை என அறிந்து கொண்டு, புகைப்பட வதந்தி வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.
இதுபோலவே டேட்டிங் அல்லது சமூக வலைத்தளங்களில் சமர்பிக்கப்படும் ஒரு நபரின் படம் அவருடையது தானா அல்லது இணையத்தில் திருடப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா என தெளிவு பெறலாம். காட்சி ரீதியிலான தளங்களில் பார்க்கும் புகைப்படம் தொடர்பான விவரங்களை அறியவும், உணவு படத்தை கொண்டு சமையல் குறிப்புகளை தேடவும் பயன்படுத்தலாம்.
தேடியந்திர முகவரிகள்
டைனிஐ > >http://tineye.com/
கூகுள் இமேஜ்ஸ் > > https://images.google.com/
யாண்டெக்ஸ் இமேஜஸ் > > https://www.yandex.com/images/
பங் இமேஜஸ் > >http://www.bing.com/images/explore?FORM=ILPSTR
ரெவ்ஐஎம்ஜி > >http://www.revimg.com/
கர்மாடிகே > >http://karmadecay.com/
இமேஹ்பிரீப் > >http://www.imagebrief.com/
இமேஜ்ரைடர் > >https://www.imageraider.com/
- சைபர்சிம்மன்,தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com
முந்தைய அத்தியாயம் >>ஆ'வலை' வீசுவோம் 27: தேடாததை தேட உதவும் தேடியந்திரம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT