Last Updated : 05 Oct, 2016 04:08 PM

 

Published : 05 Oct 2016 04:08 PM
Last Updated : 05 Oct 2016 04:08 PM

உரையாடல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்

பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் அப், தன்னுடைய பயனர்களுக்காக என்க்ரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கும் தன்னுடைய மெசஞ்சர் செயலியில் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தியபோது அனைத்து ப்ரைவஸி அமைப்புகளும் அதை வரவேற்றன. அதைத்தொடர்ந்து என்க்ரிப்ஷன் முறை ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் தொடங்கப்படும் என்று ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வசதியைப் பெறுவற்கு பயனர்கள், செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று "இரகசிய உரையாடல்கள்" (Secret Conversations) என்ற வசதியைக் க்ளிக் செய்யவேண்டும்.

அதே நேரம் எல்லாக் குறுஞ்செய்திகளும் தானாக குறியீடு வடிவிற்கு மாறிவிடும் வாட்ஸ் அப்பைப் போல் அல்லாது ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு புதிய குறுஞ்செய்திக்கும் பயனர்கள் என்க்ரிப்ஷன் வசதியை ஆக்டிவேட் செய்யவேண்டும்.

பயனர்கள் மெசஞ்சரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைப் பதிவிறக்க வேண்டும். அதில் புதுக் குறுஞ்செய்திக்கான திரையின் வலது மேல் ஓரத்தில் தோன்றும் 'சீக்ரெட்' வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு அனுப்புநர், பெறுநர் என இருவருமே மெசஞ்சரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

என்க்ரிப்ஷன் வசதி

''எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன்'' எனக் குறிப்பிடப்படும் இந்த வசதியால் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் முன்பு இருந்ததை விடப் பாதுகாப்பு மிக்கவையாகி இருக்கின்றன. இதன் மூலம் வாட்ஸ் அப் மற்றும் மெசஞ்சர் சேவையில் பகிரப்படும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை இனி மூன்றாம் நபர்களால் அணுக முடியாதவையாகி இருக்கின்றன. இதன்மூலம் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி அனுப்பி வைத்தால் அதற்குரியவர் மட்டும் அதைப் படிக்க முடியும். மற்றவர்களுக்கு அந்தத் தகவல் கலைத்துப் போடப்பட்ட அர்த்தம் கொள்ள முடியாத குறியீடுகளாகவே தோன்றும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x