Published : 25 Jun 2022 04:00 PM
Last Updated : 25 Jun 2022 04:00 PM
சென்னை: சைபர் பாதுகாப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்று இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரும், செட்ஸ் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் அஜய் குமார் சூட் வலியுறுத்தியுள்ளார்.
செட்ஸ்-இன் 21-வது நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தலைமையுரை நிகழ்த்திய அவர் பேசியது: செட்ஸ் என்று அழைக்கப்படும் மின்னனு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பிற்கான கழகம், கணினி சார்ந்த அச்சுறுத்தல்களையும் பாதுகாப்பு மீறல்களின் சவால்களையும் எதிர் கொள்ள வேண்டும். இதற்காக ஆராய்ச்சி மற்றும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
போட்டியாளர்களைவிட ஒரு படி முன்னேற வேண்டிய அவசியம் இருப்பதால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் செட்ஸ் மேன்மை அடைய வேண்டும். தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு இதுதான் இந்தக் கழகத்தின் மைய நோக்கமாக இருக்க வேண்டும்” என்றவர்,
தொழில்நுட்பம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய அரசின் முன்னாள் முதன்மை அறிவியல் ஆலோசகரும், செட்ஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் விஜய் ராகவன், சிறிய நிறுவனம் எவ்வாறு மிகப் பெரிய மதிப்பை பெற முடியும் என்று விளக்கியதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்கல்கள், தரமான ஊழியர்கள், நவீன வன்பொருள் மற்றும் மென்பொருளின் உருவாக்கம், கல்வி மற்றும் தொழில்துறையினருடனான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டார். கைவசமுள்ள வாய்ப்புக்களையும் வளங்களையும் செட்ஸ் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
செட்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர் என். சரத் சந்திர பாபு, அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வி எஸ் சுப்பிரமணியன், செட்ஸ் அமைப்பின் நிர்வாக குழு தலைவர் என். சீதாராம், அறிவியல் ஆலோசகர் டாக்டர் பர்வீந்தர் மைனி, செட்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாக மற்றும் கணக்கியல் அதிகாரி டாக்டர் டி. லட்சுமணன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
பின்னர் செட்ஸ் நிறுவனம் தயாரித்த குவாண்டம் ரேண்டம் நெம்பர் ஜெனரேட்டர் என்ற தொழில்நுட்பக் கருவியை அஜய் குமார் சூட் இயக்கி வைத்தார்.
இதையடுத்து, அஜய் குமார் சூட் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினார். பின்னர் செட்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கருவிகள், ஆய்வகங்களை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT