Published : 14 May 2022 06:40 AM
Last Updated : 14 May 2022 06:40 AM
பெங்களூரு: வீட்டில் இருந்து அலுவலக பணிபுரியும் சூழல் மாறி, அலுவலகம் வந்து பணிபுரிய சொன்னதால் 800 ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் கோடிங் கற்றுத்தரும் வொயிட் ஹாட் ஜூனியர் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் 800 நிரந்தர பணியாளர்களும் கடந்த 2 மாதங்களில் தங்களது வேலையை ராஜினாமாசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வொயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தை பைஜூஸ் நிறுவனம் 2020 ஆண்டு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தை 30 கோடி டாலருக்கு பைஜூஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 18-ம் தேதி இந்நிறுவனம் தனது பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது. அதில் மும்பை, பெங்களூரு, குருகிராமில் உள்ள அலுவலகங்களுக்கு பணிக்குத் திரும்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்குள் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகுமாறும் அன்றில் இருந்து அலுவலகத்திலிருந்து பணிபுரியும் நடைமுறையை செயல்படுத்துமாறும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மின்னஞ்சல் அனுப்பியதில் இருந்து ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களது ராஜினாமாவை மின்னஞ்சல் மூலமாக அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஊழியர்கள் பலர் தொடர்ந்து ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
நிறுவனம் செலவுக் குறைப்பு நடவடிக்கையாக ஆட்களைக் குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்ததால் பணியாளர்களே ராஜினாமா செய்ததாக தெரிகிறது. வொயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தின் நிறுவனர் கரண் பஜாஜ், இந்நிறுவனத்தை விற்பனை செய்த பிறகு இந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். கரண் பஜாஜ் நிறுவனத்தில் தொடர்ந்தவரை ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிந்தனர். அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறினார். அன்றிலிருந்து ஊழியர்கள் ராஜினாமா செய்வது தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பரவல் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்தன. அந்தச் சூழ்நிலையில் பழகிய ஊழியர்கள் தற்போது அலுவலகம் வந்து பணிபுரிய ஆர்வமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment