Published : 03 May 2022 10:02 PM
Last Updated : 03 May 2022 10:02 PM
புது டெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 18.05 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த பயனர்கள் விதிகளை மீறிய காரணத்திற்காக தடையை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021, கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது முதல் 50 லட்சம் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள், தங்களுக்கு கிடைத்த புகார்களின் விவரம் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் வாட்ஸ்அப் தாக்கல் செய்துள்ள அண்மைய அறிக்கையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையில் மார்ச் 1 முதல் 31, 2022 வரையில் தங்களது பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், பின்னூட்டங்கள் மற்றும் தானியங்கு முறையில் அத்துமீறும் பயனர்களை அடையாளம் கண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதன்படி சுமார் 18.05 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 14.25 லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்கு தடை விதித்தது வாட்ஸ்அப். '91' என்று கோடை அடிப்படையாக கொண்டது இந்திய நம்பர். அதன் மூலம் இந்திய கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தங்களது பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT