Published : 15 Apr 2022 12:24 PM
Last Updated : 15 Apr 2022 12:24 PM
கலிபோர்னியா: இன்ஸ்டன்ட் மெசேஜிங் செய்ய உதவும் தளமான வாட்ஸ்அப் செயலியில் வாட்ஸ்அப் குழுக்களுக்காக ‘கம்யூனிட்டிஸ்’ உட்பட ஐந்து அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
உலகம் முழுவதும் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மல்டி மீடியா தள செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியில் பயனர்களை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது புது புது அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குழுக்களுக்காக (குரூப்ஸ்) புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளது.
வாட்ஸ்அப் பிளாகில் இது தொடர்பாக தெரிவித்துள்ளது வாட்ஸ்அப். அதில் வாட்ஸ்அப் குழுக்களுக்காக ‘கம்யூனிட்டிஸ்’ உட்பட ஐந்து அம்சங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிட்டிஸ் அம்சத்தின் மூலம் வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களை ஒன்றாக இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பள்ளி அளவில் பார்த்தால் மாணவர் குழு, பெற்றோர் குழு, தன்னார்வலர்கள் குழு மற்றும் உள்ளூர் அளவில் இயங்கும் கிளப் குழுக்களை இந்த கம்யூனிட்டில் அம்சத்தின் மூலம் ஒன்றாக இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட குழுக்களை நிர்வகிப்பவர்கள் ஒரே மெசேஜ் மூலம் அனைவரிடத்திலும் தொடர்பு கொள்ள முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
அதாவது பள்ளியில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்வு குறித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் கம்யூனிட்டிஸ் மூலம் குழுவில் நிர்வாகிகளாக உள்ள ஆசிரியர்கள் எளிதில் தெரிவிக்க முடியுமாம். பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாம்.
மேலும் எமோஜி ரியாக்ஷன்ஸ், அட்மின் டெலிட், அதிக அளவு கொண்ட பைஃல்களை பகிர்வது, 32 பேர் வரை அழைப்பில் இணையும் வசதி மாதிரியான அம்சங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாம். வரும் நாட்களில் இந்த அம்சங்கள் அறிமுகமாகும் என வாட்ஸ்அப் சொல்லியுள்ளது. இந்த அம்சங்கள் மக்களுக்கு இடையேயான தொடர்பியலை சுலபமாக்கும் என தெரிவித்துள்ளது வாட்ஸ்அப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT