Published : 08 Apr 2022 02:03 PM
Last Updated : 08 Apr 2022 02:03 PM
‘டாடா நியு’ என்ற கைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது டாடா குழுமம். அனைத்து சேவைகளும் கிடைக்கும் சூப்பர் அப்ளிகேஷன் என சொல்லியே இது பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது. டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வரும் பெரும்பாலான மக்களின் கைகளில் மொபைல் போன்கள் சர்வ காலமும் தவழ்ந்து வருகின்றன. அதன் தொடு திரையை விரல்களின் நுனியே தொடுவதன் மூலம் நினைத்த நேரத்தில் நினைத்தவற்றை பெற முடிகிறது. புனைவுகளில் வரும் அற்புத விளக்கை போல மொபைல் போன்கள் யதார்த்த வாழ்கையில் மாறிவிட்டன. உணவு, ஆடை, அணிகலன், பணம் சார்ந்த பரிவர்த்தனைகள் உட்பட இன்னும் பிற பயன்களை மொபைல் போன்களில் உள்ள செயலிகள் மூலம் மேற்கொள்ளலாம்.
இருந்தாலும் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு செயலியை மொபைல் போன் பயனர்கள் பிரத்யேகமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய சூழலில் அனைத்து தேவைகளையும் ‘டாடா நியு’ என்ற ஒற்றை செயலியின் கீழ் கொண்டு வந்துள்ளது டாடா குழுமம்.
ஏன் இந்த செயலி?
“இந்திய நுகர்வோர்களுக்கு எளிமையான மற்றும் சுலபமான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தங்கு தடையற்ற பயனர் அனுபவம் தொடங்கி நம்பகத்தன்மை கொண்டதாக டாடா நியு செயலியின் செயல்பாடு இருக்கும். நாட்டின் பல்வேறு முன்னணி பிராண்டுகளின் சேவைகளை இதன் கீழ் பெறலாம். வரும் நாட்களில் மேலும் பல பிராண்டுகள் இதில் இணைக்கப்பட உள்ளன” என தெரிவித்துள்ளார் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன்.
என்னென்ன தேவைகளுக்கு இந்த செயலியை பயன்படுத்தலாம்?
>பிக்பாஸ்கெட்டில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, உடல் ஆரோக்கியம் சார்ந்த மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள, விடுதிகளில் தங்குவதற்கான முன்பதிவு, எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க, உணவு ஆர்டர் செய்ய, ஆடைகள் வாங்க, விமான டிக்கெட் முன்பதிவு, யுபிஐ பேமெண்ட்ஸ் போன்ற பல்வேறு தேவைகளுக்கும் இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்தலாம். டாடா குழுமத்தின் பல்வேறு பிராண்டுகளின் கீழ் இந்த சேவைகளை வழங்குகிறது டாடா.
>‘டாடா பே’ மூலம் யுபிஐ பேமெண்ட் சார்ந்த பரிவர்த்தனைகளை இந்த செயலியில் மேற்கொள்ளலாம். அதன் மூலம் ஆன்லைன், ஆப்லைன் பேமெண்ட்ஸ் மற்றும் மின்சார கட்டணம் உட்பட பல்வேறு பயன்பாட்டுக் கட்டணங்களை இதில் விரைவாக செலுத்தலாம்.
>முக்கியமாக இந்த செயலியில் வெகுமதிகளும் (ரிவார்டு) பயனர்களுக்கு கிடைக்கின்றன. பொருட்களை வாங்கும் போது பயனர்களுக்கு இந்த வெகுமதிகள் ‘நியு காயின்’ என்ற பெயரில் கிடைக்கிறது. ஒரு நியு காயினின் மதிப்பு ஒரு ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் அடுத்த முறை இந்த செயலியை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது இந்த காயின்களை ரெடீம் செய்து கொள்ளலாம்.
>இதில் கிடைக்கும் டிஜிட்டல் இதழ் மூலமாக பேஷன், தொழில்நுப்டம், பயணம், உணவு மற்றும் பலவற்றை படிக்கலாம்.
>ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்டுள்ள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் இந்த செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டுமே இதுவரையில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த செயலியை டவுன்லோடு செய்துள்ளனர்.
>மொபைல் போன் எண் கொண்டு இந்த செயலியில் சுலபமாக பயனராக இணைந்து பயன்படுத்தலாம்.
>இந்த செயலியில் ஷாப்பிங் அனுபவம் இனிமையானதாக அமைந்துள்ளதாக பயனர்கள் தங்களது ரிவ்யூவில் தெரிவித்துள்ளனர். எளிமையான பயனர் அனுபவத்தை கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் ஆண்ட்ராய்டு போனில் இந்த செயலியை ஓபன் செய்து உடனடியாக பயன்படுத்த சில நொடிகள் நேரம் பிடிக்கிறது.
>இப்போதைக்கு இந்த செயலியில் டாடா குழுமத்தின் பிராண்டுகள் தான் பெரும்பாலான சேவைகளை வழங்கி வருகிறது. வரும் நாட்களில் பிற நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT