Published : 06 Apr 2022 04:15 PM
Last Updated : 06 Apr 2022 04:15 PM
பயணத்திற்கு முன்னதாகவே பயனர்களுக்கு சுங்கச்சாவடி கட்டண விவரத்தை தரும் புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸ் விரைவில் அறிமுகம் செய்கிறது.
இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் பிரசித்தி பெற்றுள்ளது. இந்நிலையில், இதில் புதிய அம்சம் ஒன்று சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பயனர் செல்லும் பாதையில் வரும் சுங்கச்சாவடிகளில் (டோல்கேட்) செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை தரும் அம்சம் கூகுள் மேப்ஸில் விரைவில் அறிமுகமாக உள்ளதாம்.
அதன்படி இனி வரும் நாட்களில் இந்த அம்சம் அறிமுகமான பிறகு அதனை பயன்படுத்தி பயனர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் தூரம் எவ்வளவு என்பதை மட்டுமல்லாது சுங்கச்சாவடிகளில் செலுத்த வேண்டிய சுங்கச்சாவடி கட்டணம் எவ்வளவு என்பதையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் பயணத்தையும் தெளிவாக திட்டமிடலாம்.
உதாரணமாக, புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணம் எவ்வளவு என்பதை பயனர்கள் இந்த அம்சத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பயனர்கள் சுங்கச்சாவடிகள் இல்லாத சாலையை தெரிவு செய்யும் வசதியும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவில் இந்த அம்சம் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்திலேயே இந்த அம்சம் அறிமுகமாகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற அனைத்து நாடுகளிலும் இது கொண்டுவரப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இது தவிர மேலும் பிற அம்சங்களை கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளதாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT