Published : 05 Apr 2022 05:29 PM
Last Updated : 05 Apr 2022 05:29 PM
புதுடெல்லி: இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் 2021-இன் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது மத்திய அமைச்சகம். அதன்படி தவறான தகவல்களை பரப்பிய 22 யூடியூப் சார்ந்த செய்தி சேனல்கள், மூன்று ட்விட்டர் கணக்குகள், ஒரு ஃபேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி நிறுவனத்தின் வலைதளத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 22 யூடியூப் சேனல்களில் நான்கு பாகிஸ்தான் நாட்டு கணக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக சுமார் 260 கோடி பார்வையாளர்களை இந்த 22 யூடியூப் சேனல்கள் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிகளின் கீழ் முதல் முறையாக விதிகளை மீறிய இந்திய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா குறித்து தவறான செய்தியை பகிர்ந்த காரணத்திற்காக சில யூடியூப் சேனல்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தெரிகிறது.
மேலும், ஜம்மு காஷ்மீர் விவகாரம், இந்திய ஆயுதப்படைகள் குறித்தும் சில யூடியூப் சேனல்கள் போலி செய்திகளை பகிர்ந்த காரணத்தால் தடையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2021 முதல் இதுவரை 78 யூடியூப் சேனல்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம். அதேபோல இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிய பல்வேறு சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT