Published : 08 Feb 2022 07:13 PM
Last Updated : 08 Feb 2022 07:13 PM

இறுதிகட்டத்தை எட்டியது 5ஜி நெட்வொர்க்: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியா டெலிகாம் 2022' பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சித் தொடங்கிவைத்து பேசிய மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி: 5ஜி நெட்வொர்க் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்திய தொலைதொடர்பு துறையினர் தகுதிவாய்ந்த வெளிநாட்டு கொள்முதலாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக, 'இந்தியா டெலிகாம் 2022' எனும் பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்திய அரசின் வர்த்தகத் துறையின் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்புத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் 2022 பிப்ரவரி 8 முதல் 10 வரை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு இணை அமைச்சர் தேவுசின்ஹ் சவுகான், தகவல் தொடர்பு துறை செயலாளர் மற்றும் டிசிசி தலைவர் கே.ராஜாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, கண்காட்சியை மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.

கண்காட்சியைத் தொடங்கிவைத்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசும்போது, ''பெரியதொரு மின்னணு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இன்று, இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது. 20%-க்கும் அதிகமான வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இது வளர்ந்து வருகிறது. ஒரு பெரிய செமிகண்டக்டர் திட்டத்தை இப்போது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பல்வேறு பொருட்கள், தொழில்முனைவோர் மற்றும் 85,000 பொறியாளர்களை உருவாக்குவதற்கான மிக விரிவான திட்டமாக இது உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தவரை, 4ஜி கோர் மற்றும் ரேடியோ நெட்வொர்க் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 5ஜி நெட்வொர்க் அதன் இறுதிகட்ட வளர்ச்சியில் உள்ளது. நாடு இன்று 6ஜி தரநிலைகளின் வளர்ச்சியில், 6ஜி சிந்தனை செயல்பாட்டில் பங்கேற்று வருகிறது'' என்றார் மத்திய அமைச்சர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x