Published : 01 Feb 2022 06:14 PM
Last Updated : 01 Feb 2022 06:14 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2022-23-ல் கரன்சி முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு டிஜிட்டல் சார்ந்த முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றின் முக்கிய அம்சங்கள் இங்கே...
டிஜிட்டல் கரன்சி: பிளாக் செயின் மற்றும் இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும். இதனை இந்திய ரிசர்வ் வங்கி 2022-23ல் இருந்து வழங்கத் தொடங்கும். மத்திய வங்கி டிஜிட்டல் ரூபாய் (CBDC) அறிமுகப்படுத்தப்படும் என்பது டிஜிட்டல் பொருளாதாரம் பெருமளவில் வளர உதவியாக இருக்கும்.
உள்கட்டமைப்பு வசதிகளின் நிலைமை: உள்கட்டமைப்பு வசதியின் ஒருங்கிணைந்த பட்டியலில் மின்னேற்ற உள்கட்டமைப்பு வசதி மற்றும் கிரிட் முறை பேட்டரி அமைப்பு வசதி உள்ளிட்ட தகவல் தரவு மையங்களும் ஆற்றல் சேமிப்பு அமைப்புகளும் சேர்த்துக் கொள்ளப்படும். இது டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றுக்கு கடன் வசதி கிடைப்பதற்கு உதவியாக இருக்கும்.
டிஜிட்டல் வங்கி சேவை: சமீப ஆண்டுகளில் டிஜிட்டல் வங்கி சேவை, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தல், நிதிசார் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இவ்வகையில் நாட்டின் 75-வது ஆண்டு விடுதலைப் பெரு விழாவை ஒட்டி 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகளை நிறுவ வணிக வங்கிகள் முடிவு செய்துள்ளன.
எந்தநேரமும் - எந்த இடத்திலிருந்தும் அஞ்சல் அலுவலக சேமிப்பு: 2022ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் 100 சதவீதம் மையப்படுத்தப்பட்ட வங்கி சேவையை வழங்குவதாக மாற்றப்படும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் நிதிசார்ந்த சேவைகளை பெற இது உதவி செய்யும்.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது: டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறைக்கு கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியுதவி 2022-23 நிதியாண்டிலும் தொடரும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை அதிகமான அளவில் மேற்கொள்ள இது ஊக்கமளிக்கும்.
5ஜி: உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 5ஜி அலைவரிசைக்கான வலிமையான சூழல்சார் கட்டமைப்பை உருவாக்க வடிவமைப்பு அடிப்படையிலான உற்பத்தி திட்டம் தொடங்கப்படும். சுயசார்பு இந்தியா என்ற குறிக்கோளை அடைவதற்கு 14 தொழில் பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கை என்ற திட்டம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளோடு அளப்பரிய வரவேற்பை பெற்றுள்ளது. 5ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கு உதவும் வகையில் அலைவரிசை ஏலம் 2022ல் நடத்தப்படும்.
> ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் குறைந்த செலவில் அகன்ற அலைவரிசை மற்றும் மொபைல் சேவைகள் கிடைக்க உதவும் வகையில் அனைவருக்குமான சேவை செயல்பாடுகளுக்கான நிதியத்தின் கீழ் வருடாந்திர தொகையில் ஐந்து சதவிதம் ஒதுக்கப்படும்.
> நகரப் பகுதிகளைப் போன்றே அனைத்து கிராமங்களிலும் இ-சேவைகள், தொலைதொடர்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 2022-23ல் பொதுத்துறை – தனியார் பங்கேற்பின் மூலம் பாரத் மெட் பெருந்திட்டத்தின் கீழ் ஆப்டிக்கல் ஃபைபர் அமைக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.
டிஜிட்டல் பல்கலைக்கழகம்: நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, உலகத்தரத்திலான கல்வியை வழங்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதன் மூலம் வீட்டிலிருந்தே மாணவர்கள் கல்வி அனுபவங்களை பெறலாம். இந்த கல்வி பல இந்திய மொழிகளில் கிடைக்கும். இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகம் நெட்வொர்க் இணைப்பு மாதிரி அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும்.
> திறன்கள், நிலைத்தன்மை மற்றும் வேலைவாயப்பை ஊக்குவிக்க திறன் பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில்துறைகளுடனான கூட்டுறவு ஆகியவை மறுசீரமைக்கப்படும். தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தேசிய திறன் தகுதி கட்டமைப்பு உருவாக்கப்படும்.
> திறன்கள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான டிஜிட்டல் சூழலுக்கு ‘டெஸ்க்-ஸ்டாக்’ இணையதளம் தொடங்கப்படும். ஆன்லைன் பயிற்சி மூலம் மக்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த இணையதளம் இருக்கும்.
> ட்ரோன் சேவைகளுக்காக ட்ரோன் சக்திக்கு உதவும் வகையில், பல்வேறு பயன்பாடுகள் மூலம் தொடக்கநிலை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். அனைத்து மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடிஐ-க்களில், தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
தரமான கல்வியின் உலகமயமாக்கல்: கோவிட் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், ஊரக பகுதிகளில் உள்ள குழந்தைகள், பட்டியலின குழந்தைகள் மற்றும் இதர பின்தங்கிய குழந்தைகள் முறையான கல்வியை 2 ஆண்டுகளாக இழந்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். இவர்களுக்கான கல்வியை வழங்க, துணை கல்வி போதனையை வழங்க வேண்டும். இதற்காக, பிரதமரின் இ-வித்யா ‘ஒரு வகுப்பு - ஒரு டி.வி.சேனல், 12 சேனல்களில் இருந்து 200 டி.வி. சேனல்களாக விரிவாக்கப்படும். இதன் மூலம் அனைத்து மாநிலங்களும், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை மாநில மொழிகளில் துணைப் கல்வியை வழங்கும்.
> தொழில் படிப்புகளில் விவேகமான சிந்தனை திறன்களை ஊக்குவிக்கவும், படைப்பாற்றலை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதத்தில் 750 மெய்நிகர் ஆய்வு கூடங்களும், 75 திறன் மேம்பாட்டு மின்னணு ஆய்வு கூடங்களும் 2022-23ம் ஆண்டில் ஏற்படுத்தப்படும்.
> அனைத்து மொழிகளிலும் பேச்சு திறனை மேம்படுத்த உயர்தர மின்னணு - பாடத்திட்டங்கள் இணையதளம் மற்றும் செல்போன்கள், டி.வி மற்றும் ரேடியோ வழியாக டிஜிட்டல் ஆசிரியர்கள் மூலம் வழங்கும் வகையில் உருவாக்கப்படும்.
மாநிலங்களுக்கு நகர்ப்புற திட்டத்துக்கான உதவி: நகர்ப்புற திட்டம் மற்றும் வடிவமைப்பில் இந்திய அறிவை மேம்படுத்தவும், இத்துறையில் சான்றளிக்கப்பட்ட பயிற்சியை வழங்கவும், பல பகுதிகளில் உள்ள 5 கல்வி நிறுவனங்கள் சிறப்பு மையங்களாக நியமிக்கப்படும். இந்த மையங்களுக்கு தலா ரூ.250 கோடி நிதியுதவி அளிக்கப்படும். மேலும், பாடத்திட்டங்கள், தரத்தை மேம்படுத்துவதிலும், இதர கல்வி நிறுவனங்களில் உள்ள நகர்ப்புற திட்ட பாடங்களை பெறவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நடவடிக்கை எடுக்கும்.
கிப்ட்-ஐஎப்எஸ்சி: கிப்ட் நகரில், நிதி மேலாண்மை பாடப்பிரிவுகள், நிதி தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை வழங்க உலகத் தரத்திலான வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை: ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நமது பொருளாதாரத்தின் வளர்ச்சியின் உந்துசக்தியாக உருவெடுத்துள்ளன. 31.3.2022-க்கு முன் தொடங்கப்பட்ட தகுதியான தொடக்கநிலை நிறுவனங்களுக்கு, தொடங்கி 10 ஆண்டுகள் ஆன நிறுவனங்களுக்கு, தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வரி சலுகை வழங்கப்பட்டன. இது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...