Published : 21 Jan 2022 08:27 PM
Last Updated : 21 Jan 2022 08:27 PM
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் நிதி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி, சாலைப் போக்குவரத்தில் கார்பன் உமிழ்வு இல்லாத நிலைக்கு உதவ வேண்டும்’ என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வங்கிக் கடன் வசதி குறித்த அறிக்கையை நிதி ஆயோக், ராக்கி மவுன்டன் நிறுவனம் (ஆர்எம்ஐ) மற்றும் ஆர்எம்ஐ இந்தியா ஆகிய அமைப்புகள் இன்று வெளியிட்டன. இந்த அறிக்கை மின்சார வாகனங்களுக்கான சில்லரைக் கடனை முன்னுரிமைத் துறையாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறியுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கியின் முன்னரிமைத் துறை கடன் வழிகாட்டுதல்களில் மின்சார வாகனங்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
"2025ம் ஆண்டுக்குள் ரூ.40,000 கோடிக்கும், 2030ம் ஆண்டுக்குள் ரூ.3.7 லட்சம் கோடி அளவுக்கும் மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஆற்றலை இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஆனாலும், மின்சார வாகனங்களுக்கான சில்லரை கடனுதவி மந்தநிலையில் இருக்கிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் நிதி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி, சாலைப் போக்குவரத்தில் கார்பன் உமிழ்வு இல்லாத நிலைக்கு உதவ வேண்டும்" என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அவர், "ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைப் பிரிவுக் கடன் சார்ந்த உத்தரவில், தேசிய முன்னுரிமை வாய்ந்த துறைகளில் முறையான கடன் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சார வாகனங்களுக்குக் கடனுதவி அளிப்பதை அதிகரிக்க வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியால் வலுவான ஊக்கத்தொகையை அளிக்க முடியும்" என்று அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
ஆர்எம்ஐ நிர்வாக இயக்குநர் கிளே ஸ்டேரங்சர் இந்த அறிக்கையில், "மறுவிற்பனை மதிப்பு மற்றும் தயாரிப்பின் தரம் குறித்து வங்கிகள் கவலைப்படுவதால், மின்சார வாகனங்களைக் குறைந்த வட்டி வீதத்திலும், நீண்ட காலக் கடன் தவனையிலும் வாடிக்கையாளர்களால் பெற முடியவில்லை. மின்சார வாகனங்களுக்கு இந்தியா விரைவில் மாற, வங்கிகள் முன்னுரிமைப் பிரிவுக் கடன்களை ஊக்குவித்தால், 2070 ஆம் ஆண்டு பருவநிலை இலக்குகளை அடைய உதவ முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...