Published : 04 Jan 2022 03:17 PM
Last Updated : 04 Jan 2022 03:17 PM

முடிவுக்கு வந்தது பிளாக்பெர்ரி சகாப்தம்... இன்று முதல் சேவைகள் கிடைக்காது!

பிளாக்பெர்ரி சகாப்தம் கிட்டத்தட்ட இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கனடாவைச் சேர்ந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். தற்போதைய செல்போன் உலகில் ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரி போனுக்கென தனி வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர்.

கீபோர்டை மையமாகக் கொண்ட போன்கள் செயல்பாட்டில் இருந்த வரை பிளாக்பெர்ரி புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் பெருக, பிளாக்பெர்ரி சரிவை கண்டது. கடைசியாக 2013-ல் அறிமுகப்படுத்தபட்ட BlackBerry 10 மாடல் போன்கள் தனது புகழை தக்கவைக்க முயன்றது. செல்போன் சந்தைகளில் முக்கியமானதாக இருந்த இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த ஆப்டிமஸ் நிறுவனத்துடனும், உலக அளவில் டிசிஎல் கம்யூனிகேஷன் என்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தது.

ஆனால், அந்த முயற்சியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் செல்போன் உற்பத்தித் துறையில் இருந்து மெதுவாக விலகத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தனது பிராண்ட் உரிமத்தை மற்ற நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு கார்ப்பரேட் பாதுகாப்பு சேவை உரிமைகளை மட்டும் பராமரிக்கத் தொடங்கியது பிளாக்பெர்ரி. இதனிடையே, பிளாக்பெர்ரி. os போன்கள் இன்று முதல் நம்பகத்தன்மையுடன் செயல்படாது என்று அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், ஆண்ட்ராய்ட் OS-ல் இயங்கும் பிளாக்பெர்ரி போன்கள் வழக்கம்போல் இயங்கும். பிளாக்பெர்ரி 7.1 OS, பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி OS 2.1 உள்ளிட்ட மாடல் போன்கள் மட்டுமே இன்று முதல் நம்பகத்தன்மையுடன் செயல்படாது. இந்த மாடல்களில் இனி குறுஞ்செய்தி சேவைகள், அழைப்புகள் போன்றவை செய்ய முடியாது. ஏன், அவசர அழைப்பான 911 நம்பருக்கு கூட இனி கால் செய்ய முடியாது. மேலும், இந்த மாடல்களில் இனி எந்தவித அப்டேட்டும் கிடைக்காது என்றும் பிளாக்பெர்ரி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த சேவைகளை நிறுத்தபோவதாக ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில பயனர்களின் கோரிக்கையை ஏற்று இத்தனை நாட்கள் சேவையை நீடித்த பிளாக்பெர்ரி இப்போது நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x