Last Updated : 04 Mar, 2016 11:36 AM

 

Published : 04 Mar 2016 11:36 AM
Last Updated : 04 Mar 2016 11:36 AM

இளமை .நெட்: ஃபேஸ்புக்கில் இனி விதவிதமாக லைக் செய்யலாம்!

ஃபேஸ்புக் பயனாளிகள் இனி ஒரு பதிவுக்கு ‘லைக்’ தெரிவிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அந்தப் பதிவு குறித்த உணர்வையும் வெளிப்படுத்தலாம்.

இதற்கு உதவும் வகையில் ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள ‘ரியாக்‌ஷன்ஸ்’ வசதி பற்றி இப்போது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டுவருகிறது. ஃபேஸ்புக்கின் ‘லைக்’ வசதியின் நீட்டிப்பான இந்த வசதியின் பொருளாதார கோணம் பற்றி விவாதிக்கப்படுவதோடு உளவியல் மற்றும் மொழியியல் பார்வையிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலை வெளியிட்டாலும், ஒளிப்படம் அல்லது வீடியோவைப் பகிர்ந்துகொண்டாலும், நண்பர்களும் அதை லைக் செய்யலாம். படித்ததும் பிடித்திருந்தால் அதைத் தெரிவிக்க வார்த்தைகள் தேவை இல்லை. இதற்காகவே இருக்கும் உயர்த்திய கட்டை விரல் ஐகானை கிளிக் செய்தால் போதும், பயனாளியின் விருப்பம் பதிவாகிப் பகிரப்படும்.

இந்த எளிமை, லைக் செய்வதையும், லைக் செய்யப்படுவதையும் ஃபேஸ்புக் கலாச்சாரமாகவே மாற்றியுள்ளது. லைக் செய்யுங்கள் எனக் கோரிக்கை வைப்பதும், இத்தனை ஆயிரம் லைக்குகள் குவிந்தன எனப் பெருமைப்பட்டுக்கொள்வதும் ஃபேஸ்புக் மொழியாகி இருக்கிறது. ஃபேஸ்புக்கில் பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்களின் செல்வாக்கும் லைக் எண்ணிக்கையால்தான் அளவிடப்படுகிறது. பிராண்ட்களும் இந்த எண்ணிக்கை விளையாட்டில் மகிழ்ச்சியோடு பங்கேற்கின்றன.

ஆனால் லைக் செய்வதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது எளிதாக இருந்தாலும் எல்லா நேரங்களிலும் பொருத்தமானதாக இல்லை. அதிலும் குறிப்பாக வருத்தமான அல்லது சோகமான நிலைத்தகவல்களுக்கு லைக் செய்வது என்பது சங்கடமான அனுபவமாக மாறிவிடுகிறது. அதனால்தான் ஃபேஸ்புக் பயனாளிகள் லைக் பட்டன் மட்டும் போதாது மாற்று பட்டன்களும் தேவை எனக் கோரி வந்தனர். லைக் செய்வது போலவே ‘டிஸ்லைக்’ செய்யவும் ஒரு பட்டன் வேண்டும் என்றுகூடப் பயனாளிகள் வலியுறுத்தினர்.

ஃபேஸ்புக்கும் சரி அதன் நிறுவனர் ஜூக்கர்பர்க்கும் சரி இந்தத் தேவையை உணர்ந்தே இருந்தனர். ஆனால் இதை நிறைவேற்றுவதில்தான் சிக்கல் இருந்தது. டிஸ்லைக் பட்டனை அறிமுகம் செய்வதால் ஏற்படக்கூடிய விபரீதங்களை ஃபேஸ்புக் அறிந்திருந்தது. முதலில் இது பயனாளிகள் மத்தியில் டிஸ்லைக் யுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் இருந்தது. எப்படியும் இத்தனை ஆயிரம் பேர் லைக் செய்தனர் என்று சொல்வது போல, இத்தனை பேர் டிஸ்லைக் செய்தனர் என்று சொல்வது விரும்பத்தக்கது இல்லை அல்லவா!

இப்படிப் பல விதப் பாதிப்புகளை யோசித்துப்பார்த்து ஃபேஸ்புக் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் தயங்கியது. கடந்த ஆண்டு, ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியிலான டவுன் ஹால் கூட்டத்தில் உரையாடிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், லைக் பட்டன் தவிர வேறு பட்டன்கள் தேவை என்பதை ஒப்புக்கொண்டாலும், டிஸ்லைக் பட்டனாக அது இருக்காது எனக் கூறியிருந்தார்.

அதன் பிறகு ஃபேஸ்புக் இது தொடர்பாக நிறைய யோசித்து, ரியாக்‌ஷன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் மத்தியில் இதை வெள்ளோட்டம் பார்த்து அவர்கள் கருத்துகளின் அடிப்படையில் இப்போது இந்த வசதி பயனாளிகளுக்குக் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியில் லைக் செய்யலாம். லைக் தவிர தன் கருத்தை ஐந்து விதமாக வெளிப்படுத்தலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு வித சித்திர வடிவம் (எமோடிகான்ஸ்) இருக்கும். இவ்வாறு பயனாளிகள் அன்பு, வியப்பு, கோபம், சிரிப்பு, சோகம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தலாம். லைக் சின்னத்தை கிளிக் செய்யும்போது விரும்பினால் இந்த வசதியை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

உண்மையில் இந்த வசதியால் ஃபேஸ்புக்குக்கே அதிக ஆதாயம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக், விளம்பரங்கள் மூலம்தான் வருவாயை அள்ளுகிறது. பயனாளிகள் நிலைத்தகவல்களுக்கு ஏற்ப அது பொருத்தமான விளம்பரங்களை இடம்பெற வைக்கிறது. இந்தப் புரிதலை மேலும் ஆழமாக்கிக் கொள்ள ஃபேஸ்புக் முயன்றுவரும் நிலையில், கருத்து தெரிவிப்பவர்கள் லைக் செய்யும் விதத்தை வைத்தே அதனால் அவர்கள் விருப்பு, வெறுப்புகளை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதப்படுகிறது.

உதாரணத்துக்குக் குறிப்பிட்ட நிறுவன செய்தி தொடர்பாக ஒருவர் ‘கோபம்’ தெரிவித்திருந்தால் அவரது ‘டைம்லைனி’ல் அந்த நிறுவனம் தொடர்பான செய்தியைத் தவிர்த்துவிடலாம். அதே நேரத்தில் இன்னொருவர் நேசிப்பை வெளிப்படுத்தி இருந்தால் அவரது டைம்லைனில் அந்தப் பொருள் தொடர்பான செய்தியை அதிகமாக்கலாம். இப்படிப் பயனாளிகளின் மன உணர்வுகளை மேலும் சரியாக அறிந்துகொள்ள முடிவதால் ஃபேஸ்புக்குக்கு இது பெரும் சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க மொழியிய‌ல் வல்லுந‌ர்கள் உண்மையில் இப்படி லைக் மூலம் கருத்து தெரிவிப்பது, அந்த வசதியை மேலும் விரிவுபடுத்தியிருப்பது என்பது மனித மனம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தையே கட்டுப்படுத்தி மாற்றி அமைக்க‌க்கூடியது என அச்சம் தெரிவித்துள்ளனர். மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் நுட்பமானவை. அவற்றைச் சித்திர எழுத்து வடிவத்துக்குள் சுருக்கப் பார்ப்பதே தவறானது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேர் பேச்சில் வார்த்தைகளில் மட்டும் மல்லாமல் உடல் அசைவு, கண் பார்வை எனப் பலவிதங்களில் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்படும் நிலையில், வெறும் ஐந்து வித லைக் சின்னங்களில் அவற்றை முடக்கப் பார்ப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x