Published : 11 Mar 2016 11:53 AM
Last Updated : 11 Mar 2016 11:53 AM
ஆஸ்திரேலிய அம்மா ஷெல்லி கிப்பார்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்கும்போது, இப்படி எல்லாம் கூந்தலை அழகாகப் பின்னிக்கொள்ள முடியுமா எனும் வியப்பு ஏற்படும். அந்த வியப்பைத் தொடர்ந்து பெறுவதற்காகவே இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடரத் தோன்றும். இப்படி ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் ஷெல்லியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்திருக்கிறது.
மெல்பர்ன் நகரில் வசிக்கும் ஷெல்லி பெரும்பாலான அன்பான அம்மாக்கள் போலவே தனது செல்ல மகள் கிரேஸுக்குத் தினமும் கூந்தலைப் பின்னி விடுகிறார். ஆனால் ஷெல்லிக்கும் மற்ற அம்மாக்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், அவர் தினமும் ஒரே மாதிரியாகப் பின்னுவதில்லை. தினமும் வெவ்வேறு ‘ஸ்டைல்!’
ஒரு நாள் பார்த்தால் தலை முழுவதும் சின்னச் சின்னப் பின்னல்களாக நிறைந்திருக்கிறது. இன்னொரு நாள் பார்த்தால் இடது பக்கக் கூந்தல் மட்டும் தூக்கனாங்குருவி கூடு போல பின்னப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பார்த்தால் பின்னல் இதய வடிவில் அமைந்திருக்கிறது. இன்னொரு நாள் பார்த்தால் பின்னல் வாய் திறந்திருக்கும் ‘ஜிப்’ வடிவில் அமைந்திருக்கிறது.
இளம் வயதிலிருந்தே அவருக்குத் தன் குடும்பத்தினர் மற்றும் தோழிகளுக்குக் கூந்தலைப் பின்னி விடுவதில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆசை மகளும் அவரிடம் பொறுமையாகத் தலையைக் கொடுத்துக் காத்திருந்ததால் அவர் மகளுக்குப் பலவிதமான பின்னலை செய்து பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் ஒளிப்படப் பகிர்வு தளத்தில் பல அம்மாக்கள் இப்படி மகள்களுக்குச் செய்த பின்னல் அலங்காரத்தை ஒளிப்படமாகப் பகிர்ந்துகொண்டதைப் பார்த்து ரசித்தவர் தானும் prettylittlebraids.com எனும் பக்கத்தை உண்டாக்கி மகளின் ஒளிப்படங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
மற்ற இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மற்றும் யூடியூப் வழிகாட்டி வீடியோக்களைப் பார்த்து அவர் விதவிதமான பின்னல் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு அதே பாணியில் பின்னிவருகிறார். அவரே சொந்தமாகவும் பின்னல் அலங்காரங்களை உருவாக்குகிறார்.
ஷெல்லி இப்போது மெல்பர்ன் சுற்றுவட்டாரத்தில் வித்தியாசமான பின்னலுக்காகப் பலராலும் நாடப்படுகிறார். அழகுக் கலை வகுப்பு மற்றும் பயிலரங்குகள் நடத்துகிறார்.
ஷெல்லியின் இன்ஸ்டாகிராம் பக்கம்: >https://www.instagram.com/prettylittlebraids/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT