Published : 11 Dec 2015 01:05 PM
Last Updated : 11 Dec 2015 01:05 PM
அமெரிக்காவின் கலிபோர்னியா என்றதும் சிலிக்கான் வேலி தானே முதலில் நினைவுக்கு வரும். உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களின் தாய்வீடாக சிலிக்கான் வேலி அமைந்திருப்பது கலிபோர்னியாவுக்குப் பெருமை தரும் விஷயம் என்றாலும் இதில் முரணான ஒரு விஷயம் இருக்கிறது. கலிபோர்னியாவில் கணினி அறிவியல் பாடத்திற்கு முன்னுரிமை இல்லை என்பதுதான் அது!
கலிபோர்னியாவில் உள்ள பள்ளிகளில் உயர்நிலை மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்குக் காரணம் கல்லூரி அனுமதியில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் மதிப்பெண் வலியுறுத்தப்படுவதுபோல கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் முக்கியமாக கருதப்படுவதில்லை. இதன் காரணமாகப் பெரும்பாலான பள்ளிகள் இதை ஒரு விருப்பப் பாடமாகவே அளிக்கின்றன.
இந்தக் காரணத்தினாலேயே மாணவர்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைத் தேர்வு செய்வதிலும் அதில் தேர்ச்சி பெறுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலை வருந்தத்தக்கது என்று கூறி சிலர், ஒரு குழுவை உருவாக்கி கலிபோர்னியக் கல்வி அமைப்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அடிப்படைப் பாடமாகக் கருத வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாற்றத்திற்கான கோரிக்கைகளை மனுக்களாக வெளியிட்டு ஆதரவு திரட்டும் ‘சேஞ்ச்.ஆர்க்' தளத்தில் ஒரு மனு வெளியிடப்பட்டுப் பத்தாயிரத்துக்கு மேல் ஆதரவுக் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
டிஜிட்டல் யுகத்தில் கலிபோர்னியா முன்னணியில் இருந்தும்கூட அங்குள்ள மாணவர்கள் தரமான கணினி அறிவியல் பாடத்தை அணுக முடியாமல் இருப்பது குறித்தும், மாணவர்களின் எதிர்கால நலனுக்கு இந்தப் பாடப் பிரிவு எந்த அளவு முக்கியம் என்றும் இந்த மனு வலியுறுத்துகிறது.
மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வு செய்யும் துறை எதுவாக இருந்தாலும் 21-ம் நூற்றாண்டில் அவர்களுக்குக் கணினி அறிவியலில் அடிப்படை அறிவு பலமாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கணினி அறிவியல் பாடம் மாணவர்களின் கணினி சிந்தனை மற்றும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்திப் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொள்ள வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல; புதியவற்றைப் படைக்கும் ஆற்றலையும் உண்டாக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசம் எழுதியுள்ள கடிதத்தில் அல்ஜீப்ரா போல, கால்குலஸ் போல கணினி அறிவியலும் முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கவனிக்க வேண்டியது கலிபோர்னியா மட்டும் அல்ல. நாமும் தான் இல்லையா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT