Published : 02 Jun 2014 12:00 AM
Last Updated : 02 Jun 2014 12:00 AM
கார் ஆட்டோ மொபைல்தான் ஆனாலும் அதை ஓட்ட ஓட்டுநர் தேவை. ஆனால் கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரைச் செலுத்த ஓட்டுநர் தேவையில்லை. அது தானாகவே ஓடும். ஓட்டுநருக்கென்ற இருக்கையே அதில் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனெனில் அதில் ஸ்டியரிங், க்ளட்ச், ப்ரேக் போன்ற சாதாரணமாகக் காரில் காணப்படும் எந்த உபகரணங்களும் இல்லை. ஆனாலும் அது ஓடும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தில் உங்களைக் கொண்டுசேர்க்கும். எல்லாமே தொழில்நுட்பத்தின் வல்லமை.
இணையற்ற புரட்சியை இணையத்தில் நிகழ்த்திக் காட்டிய கூகுள் நிறுவனத்தின் மற்றொரு புதுமை முயற்சி இந்த கூகுள் கார். இப்போதைக்கு உருவாக்கப்பட்டிருப்பது முன்மாதிரி வடிவமே. இது மின் சக்தியில் இயங்குகிறது. கூகுள் மேப் வழிகாட்டுகிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதாமல் இருக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் உதவுகின்றன.
இதில் இரண்டு பேர் அமரலாம்.
2009-லிருந்தே தானாய் ஓடும் காரை உருவாக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. மொத்தம் 200 கார்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள் இருக்கிறது. கட்டளையிட்டால் போதும், பயணிகளை அழைத்துக்கொண்டு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களைக் கொண்டு சேர்த்து சேவையாற்றும் இந்தக் கார். நுகர்வோருக்கு நெருக்கமான உணர்வைத் தர வேண்டும் என்பதற்காக இந்தக் காரின் முகப்புப் பகுதி மனித முகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக முன்பகுதியில் கண்ணாடிக்குப் பதிலாக பிளாஸ்டிக் காற்றுத் தடுப்பானே உள்ளது. இப்போதைக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இதைச் செலுத்த முடியும்.
ஆனால், இந்தக் கார் குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்போதைக்கு இதில் தீம் பார்க் ரைடிங் போன்ற ஜாலி ரைடிங் மட்டுமே செய்ய முடியும் என்னும் பேச்சு எழுந்திருக்கிறது. இந்தக் காரைப் போக்குவரத்துச் சாலைகளில் சோதிப்பதற்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நிவாடா ஆகிய மாகாணங்கள் மட்டுமே சட்ட ஒப்புதலைத் தந்துள்ளன. ஆனால் போகப்போக அனைத்து மாகாணங்களும் உலக நாடுகளும் ஒப்புதல் தரும் என கூகுள் நிறுவனர்களில் ஒருவரான செர்கே பிரின் நம்பிக்கையோடு சொல்கிறார். இந்தக் கார் சாதாரணமாகப் புழக்கத்தில் வர பல ஆண்டு காலம் பிடிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment