Published : 29 Jan 2021 12:56 PM
Last Updated : 29 Jan 2021 12:56 PM
வாட்ஸ் அப் உரையாடல் பதிவுகளை டெலிகிராம் செயலியிலும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் புதிய தனியுரிமைக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் பாதுகாப்பு குறித்து பல பயனர்களிடையே கேள்வியெழுந்தது. இதனால் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக இருக்கும் மற்ற உரையாடல் செயலிகளை மக்கள் நாட ஆரம்பித்தனர். இதில் டெலிகிராமும் ஒரு செயலி. கிட்டத்தட்ட 52.5 கோடி பேர் டெலிகிராமை தற்போது பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ் அப்பில் உரையாடிவிட்டு, புதிதாக டெலிகிராமில் உரையாட ஆரம்பிக்கும்போது பழைய உரையாடல்கள், பகிர்வுகள் அனைத்தும் வாட்ஸ் அப்பில்தான் இருக்கும். ஆனால், ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலிகளில் இப்போது புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வாட்ஸ் அப்பில் இருக்கும் பயனரது உரையாடல்களை அப்படியே டெலிகிராமிலும் மாற்றிக் கொள்ளலாம். அப்படிச் செய்யும்போது, விட்ட இடத்திலிருந்தே உரையாடலைத் தொடங்கும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கும். தனி நபர் உரையாடல், குழு உரையாடல் என இரண்டையுமே இப்படி அங்கிருந்து இங்கு மாற்றிக் கொள்ளலாம்.
ஆப்பிள் ஐஓஎஸ் சாதனங்களில் வாட்ஸ் அப்பில், குறிப்பிட்ட உரையாடலைத் திறக்க வேண்டும். அதில் குழுவின் பெயரையோ, அந்த நபரின் பெயரையோ தட்டி, இன்ஃபோ என்கிற பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
அதில் Export Chat என்கிற தேர்வு இருக்கும். அதைத் தட்டும்போது, டெலிகிராம் செயலிக்கு அந்த உரையாடலை எக்ஸ்போர்ட் செய்யும் தேர்வும் வரும். இப்படி மாற்றும்போது புகைப்படங்களை மாற்றாமல் வெறும் உரையாடல்களை மட்டுமே மாற்றவும் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு இந்தப் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT