Last Updated : 28 Jan, 2021 12:21 PM

 

Published : 28 Jan 2021 12:21 PM
Last Updated : 28 Jan 2021 12:21 PM

100 கோடி பயனர்களைத் தாண்டிய ஐஃபோன்: வருவாயிலும் புதிய சாதனை

சர்வதேச அளவில் ஐஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடி என்கிற எண்ணிக்கையைத் தாண்டியதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பார் காலாண்டு முடிவில் ஐஃபோன் மூலம் அந்நிறுவனம் 65.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாகப் பெற்று சாதனை படைத்தது. இது கடந்த வருடத்தை விட 17 சதவீதம் அதிகமாகும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஐஃபோன்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளார்.

"டிசம்பர் காலாண்டில் விற்பனையில் 165 கோடி சாதனங்களை நாங்கள் கடந்தோம். ஐஃபோன் விற்பனை கடந்த வருடத்தை விட 17 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஐஃபோன் 12க்கான தேவை அதிகமாகியிருக்கிறது. நாங்கள் விற்பனை செய்து, இப்போது செயல்பாட்டில் இருக்கும் ஐஃபோன்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 100 கோடியைத் தாண்டியிருக்கிறது.

இதற்கு முன் இல்லாத தொழில்நுட்பம், உலகத்தரமான கேமரா மற்றும் 5ஜியின் திறன் இருக்கும் புதிய ஐஃபோன் மாடலுக்கு மக்கள் அளித்து வரும் வரவேற்பு சிறப்பாக இருக்கிறது. அதிலும் கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களிலும் நன்றாக இருக்கிறது.

மேலும் டிசம்பர் காலாண்டில், எங்கள் புதிய ஐபேட் ஏர் மற்றும் எம் 1 சிப் பொருத்தப்பட்டிருக்கும் முதல் தலைமுறை மேக் ஆகிய கருவிகளின் விற்பனையும் தொடங்கியது. இந்த அத்தனை சாதனங்களுக்கும் மக்கள் அளித்துள்ள வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறது" என்று டிம் குக் கூறியுள்ளார்.

ஐஃபோன் 12 மாடல் திருப்திகரமாக இருப்பதாக 98 சதவீத வாடிக்கையாளர்கள் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் சாதனங்கள் மூலம் 95.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை அந்நிறுவனம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21 சதவீதம் அதிகமாகும். மேலும் இதுவரை கிடைத்த வருவாயில் இதுவே அதிகமாகும். டிசம்பர் மாதத்தில் மட்டுமே 8.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது. இதுவும் ஒரு புதிய சாதனையாகும்.

மேலும் ஆப்பிள் சேவைகளுக்கான சந்தாதாரர்களும் அதிகரித்துள்ளனர். கடந்த வருடத்துக்குள் 60 கோடி கட்டண சந்தாதாரர்களை ஈர்க்க வேண்டும் என்று ஆப்பிள் திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்த இலக்கை எட்டிவிட்டது. தற்போது 62 கோடிக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்கள் ஆப்பிள் சேவைகளை பயன்படுத்துகின்றனர். இது கடந்த வருடத்தை விட (2019) 14 கோடி அதிகமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x