Published : 16 Jan 2021 07:34 PM
Last Updated : 16 Jan 2021 07:34 PM
தங்களுடைய நிபந்தனைகளை ஏற்காத கணக்குகள் பிப்ரவரி 8-ம் தேதியன்று முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த வாட்ஸ் அப், தனது முடிவில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மே 15 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட நிபந்தனைகளில், ஃபேஸ்புக்குடன் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவது தொடர்பான அம்சமே அதிகம் சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிபந்தனைகள் பிப்ரவரி 8-ம் தேதி அன்று அமலுக்கு வருவதாகவும், வாட்ஸ் அப் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் உண்டான சர்ச்சையை அடுத்து, புதிய நிபந்தனை மாற்றம் வாட்ஸ் அப் வர்த்தக சேவை தொடர்பானது என்றும், பயனாளிகள் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் வாட்ஸ் அப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும் வாட்ஸ் அப் பயனர்களின் தனியுரிமைப் பாதுகாப்பு குறித்த கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்களுடைய நிபந்தனைகளை நிற்காத கணக்குகள் பிப்ரவரி 8-ம் தேதியன்று முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த வாட்ஸ் அப், தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. பயனர்கள் தங்களுடைய புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மே 15 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (ஜன.16) வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பயனர்களின் வாட்ஸ் அப் கணக்கு பிப்ரவரி 8 அன்று முடக்கவோ, தற்காலிகமாக நீக்கவோ படாது. இது தொடர்பாகப் பரவி வரும் பல்வேறு தகவல்கள் உண்மையல்ல. அவை தவறானவையே. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும்.
புதிய அப்டேட்டில் எவ்வாறு தரவுகள் சேகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பை இப்போது எல்லோரும் வணிகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்துவதில்லை என்பதால், வருங்காலத்தில் இன்னு அதிகப் பயனர்கள் வணிகப் பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைக்கிறோம். இதனால் புதிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்துப் பயனர்கள் அறிந்துகொள்ள போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT