Last Updated : 26 Oct, 2015 12:14 PM

 

Published : 26 Oct 2015 12:14 PM
Last Updated : 26 Oct 2015 12:14 PM

ஆவலை வீசுவோம் 14 - காட்சி தேடியந்திரங்கள்

தேடல் முடிவுகளை வழக்கமான முறையில் பட்டியலிடுவதற்கு பதிலாக காட்சி அமைப்பாக அளித்து, தேடல் அனுபவத்தை மாற்றி அமைக்க முற்பட்ட புதுமை தேடியந்திரங்களை நீங்கள் அறிவீர்களா?

வெற்றிகரமான தேடியந்திரமாக இருப்பதை மீறி, அடிப்படையில் ஒரு தேடியந்திரமாக கூகுள் எந்தப் புதுமையையும் செய்துவிடவில்லை என்று சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

உடனே கூகுள் அபிமானிகள் (நானும் தான்) தேடியந்திரமாக கூகுள் சிறந்து விளங்கும் அம்சங்களை எல்லாம் பட்டியலிட்டு அதன் சார்பில் வாதாட தயாராக வேண்டாம். அதற்கு அவசியமே இல்லை.

கூகுள் மேம்பட்ட தேடியந்திரமாக அறிமுமாகி வெற்றி பெற்றது என்பதிலோ, அதன் மைய சேவையை மேலும் மெருக்கேற்று விரிவுபடுத்தும் வகையில் எண்ணற்ற புதுமைகளை சின்னதும் பெரிதுமாக அறிமுகம் செய்துள்ளது என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை.

இவை எல்லாவற்றையும் மீறி, கூகுள் அடிப்படையில் எந்த புதுமையையும் செய்துவிடவில்லை என்று சொல்லும்போது கவனிக்க வேண்டியது அடிப்படை என்ற அம்சத்தைதான்.

எல்லோரும் அறிந்திருக்க கூடியது போல கூகுள் முதல் தேடியந்திரம் அல்ல; அந்த பெருமைக்கு உரியது ஆர்ச்சி. அதன் பிறகும், அல்டாவிஸ்டா, வெப்கிராலர், லைகோஸ், யாஹூ, எக்சைட் என எண்ணற்ற தேடியந்திரங்கள் உருவாகின. ஒவ்வொரு தேடியந்திரமும் அதனளவில் குறிப்பிட்ட நோக்கில் இணைய தேடலை மேம்படுத்தின. ஆனால், எல்லா தேடியந்திரங்களிலும் தேடுவதற்கான தேடல் கட்டமும், தேடப்படும் பதங்களுக்கு ஏற்ப முடிவுகளை இணைப்புகளின் பட்டியலாக வரிசையாக பட்டியலிடுவதும் அடிப்படையான அம்சங்களாக இருந்தன.

கூகுளும் இதே அடிப்படையைதான் பின்பற்றி இதன் மீது தேடல் மாளிகையை எழுப்பியது. சொல்லப்போனால் ஆரம்ப தேடியந்திரங்கள் முழு இணையத்தையும் தேடவில்லை. வெப்கிராலருக்கு முந்தைய தேடியந்திரங்கள் வெறும் தேடல் முகவரிகளை மட்டுமே திரட்டித்தந்தன. அதன் பிறகு தான் இணையம் முழுவதும் துழாவி இணைய பக்கங்களை திரட்டுவதும், அவற்றில் இருந்து பொருத்தமான முடிவுகளை பட்டியலிட்டு தருவதும் அறிமுகமாயின. இந்தப் பட்டியலிடுவதில் பேஜ்ராங்க் எனும் புதுமையை கூகுள் கொண்டு வந்ததே தவிர அடிப்படையில் அது தேடியந்திர வடிவமைப்பிலோ அல்லது செயல்பாட்டிலோ எந்த மாற்றத்தையும் செய்துவிடவில்லை.

நிற்க, இது கூகுள் மீதான புகார் அல்ல; எல்லா தேடியந்திரங்களுக்கும் இது பொருந்தும் - காட்சி தேடியந்திரங்கள் தவிர! ஏனெனில் இந்த வகை தேடியந்திரங்கள்தான் தேடல் முடிவுகளை காணும் விதத்தில் மாற்றத்தை கொண்டு வர முயன்றன. இன்னொரு விதமாக சொல்வது என்றால் முடிவுகளை தோன்றச்செய்வதில் புதுமையை புகுத்தின.

தேடல் முடிவுகளை பட்டியல் சிறையில் இருந்து விடுவிக்க முற்பட்ட இந்த தேடியந்திரங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் காணாமல் போய்விட்டாலும் கூட, தேடல் வரலாற்றில் இவை முக்கிய அங்கம் வகிக்கின்றன. தேடலுடன் பின்னிபிணைந்துவிட்ட பட்டியல் அமைப்பை இவை மாற்ற முயன்றது தான் காரணம். வடிவமைப்பு நோக்கில் இவை இன்னும் கூட முக்கியமானவை.

காட்சி தேடியந்திரங்கள் எனும்போது உருவங்களையும், புகைப்படங்களை தேடித்தரக்கூடிய தேடியந்திரங்கள் என நினைக்கத் தோன்றினாலும் இங்கு குறிப்பிடப்படுவது வரி வடிவ தேடியந்திரங்களே. ஆனால் தேடல் முடிவுகளை வழக்கமான முறையில் பட்டியலிடுவதற்கு பதில் காட்சி அமைப்பாக அளித்து தேடல் அனுபவத்தை மாற்றி அமைக்க முற்பட்ட புதுமை தேடியந்திரங்கள்!

ஒரு காலத்தில் இந்த வகை தேடியந்திரங்கள் அலையென உண்டாயின தெரியுமா? இவற்றில் பல, காட்சி ரீதியான அம்சம் ஒன்றை வைத்தே கூகுளுக்கு சவால் விட்டுவிடலாம் என நினைத்தது பரிதாபமானது என்றாலும், இணையவாசிகளுக்கு இவை மாறுபட்ட அனுபவத்தை வழங்க முற்பட்டதை மறுப்பதற்கில்லை. அதுமட்டும் அல்ல; ஒரு சில கூகுள் தேடலை அடிப்படையாக வைத்துக்கொண்டு முடிவுகளை மட்டும் புதுமையான முறையில் காட்சி ரீதியாக அளிக்க முற்பட்டன.

இப்போது உங்கள் தேடல் அனுபவத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் - இணையத்தில் ஒரு தகவல் தேவைப்படுகிறது. அதை பெற்றுத் தரக்கூடிய பதம் அல்லது குறிச்சொல்லை தேடல் கட்டத்தில் டைப் செய்கிறீர்கள். அடுத்த நொடிக்கும் குறைவான நேரத்தில் வரிசையாக தேடல் முடிவுகள் பட்டியலிடப்படுகின்றன. முதல் பக்கத்தில் பத்து முடிவுகளும், அடுத்து நீளும் பக்கங்களில் வரிசையாக பத்து பத்து முடிவுகளாக தோன்றுகின்றன.

இந்தப் பட்டியலில் உங்களுக்கான தகவலை தேடி கண்டுபிடித்து செல்கிறீர்கள் என்றாலும், இப்படி பட்டியலாக மட்டுமே முடிவுகளை பார்க்க முடிவது அலுப்பாக இருக்கிறது என எப்போதாவது நீங்கள் உணர்ந்தது உண்டா? அல்லது முடிவுகள் ஏன் பட்டியலாக தோன்ற வேண்டும் என நினைத்ததுண்டா?

காட்சி தேடியந்திரங்கள் இப்படி கேட்க வைத்தன.

தேடல் முடிவுகளை அவை பட்டியலிடாமல் காட்சி அமைப்பாக அளித்து தேடல் அனுபவத்தை மேம்படுத்த முயன்றன. இந்த வரிசையில் முதலில் தோன்றியது எந்த தேடியந்திரம் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் இவை அடுத்தடுத்து அறிமுகமாகி கொண்டிருந்தன.

இந்த வரிசையை நாம் ரெட் இசட் தேடியந்திரத்தில் இருந்து துவங்கலாம். இதற்கு காரணம், இது காட்சி தேடியந்திர பிரிவில் முதலில் உருவானவற்றில் ஒன்று என்பது மட்டும் அல்ல, முடிவுகளை காட்சி ரீதியாக அளிப்பதில் உள்ள அனுகூலத்துக்கான மிக எளிதான உதாரணமும் என்பதால்தான்!

வழ்க்கமான தேடியந்திரம் போல தான் இதில் தேட வேண்டும். ஆனால் தேடல் கட்டளை பிறப்பித்த பிறகு முடிவுகள் பட்டியலாக தோன்றுவதற்கு பதில், அதில் உள்ள இணையதளங்களின் முகப்புப் பக்கங்களின் அணிவகுப்பாக தோன்றும். அதாவது இணையதளங்களின் ஸ்லைடுஷோ போல இருக்கும். இவற்றின் மீது மவுஸ் கர்சரை கொண்டு சென்றால் அடுத்தடுத்து நகரும். தேவையான காட்சியில் கிளிக் செய்தால் அதற்கான இணைப்பு தனியே தோன்றும். முதன்முதலில் முடிவுகளை இப்படி நகரும் படங்களாக பார்க்கும்போது புதிய அனுபவமாக இருக்கும். நல்லவேளையாக ரெட் இசன் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் டாட் ஹாப் (http://dothop.com/home ) எனும் பெயரில் இருக்கிறது.

சர்ச்கியூப் இதேபோலவே தேடல் முடிவுகளில் இடம்பெறும் இணையதளங்களின் முகப்புப் பக்கங்களை முப்பரிமாண சதுர வடிவில் வழங்கியது. சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தில் தோன்றும் இணையதளங்களை கிளிக் செய்து பார்க்கலாம். சர்ச்கியூப் இப்போது பயன்பாட்டில் இல்லை.

குயிண்ட்ரா, க்ரோக்கர், கார்ட்டூ, நெக்ஸ்ப்ளோர், லைபிளாஸ்மா, கூல்ரிஸ் உள்ளிட்ட காட்சி தேடியந்திரங்களும் இப்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும், இவை செயல்பட்ட விதத்தை தெரிந்துகொள்வது காட்சி தேடியந்திரங்கள் உண்டாக்கிய சாத்தியத்தின் கீற்றுகளை அறிய உதவும்.

க்ரோக்கர் தேடல் முடிவுகளை வரைபடம் போல காட்சிப்படுத்தியது (அருகிலேயே வழக்கமான பட்டியல் வடிவமும் இருந்தது). அந்த வரைபடத்தை பார்க்கும்போதே தேடல் முடிவுகளின் தன்மை அவற்றுக்குள்ள தொடர்பு ஆகியவற்றை ஒரு பறவை பார்வையாக பார்ப்பது போல இருக்கும். க்ரோக்கர் சொந்தமாக தேடாமல், யாஹூ, விக்கிபீடியா ஆகியவற்றின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு செயல்பட்டது.

க்யிண்ட்ரா (Quintura) இன்னும் சற்று வித்தியாசமான முறையில் தேடல் முடிவுகளை அவற்றின் குறிச்சொற்களின் மேக அமைப்புகளாக காட்சிப்படுத்தியது. இந்தக் குறிச்சொற்கள் முடிவுகளை வகைப்படுத்துவதாகவும் அமைந்திருந்தன. இதிலும் வழக்கமான தேடல் பட்டியல் அருகில் இடம் பெற்றிருந்தது. க்யிண்ட்ரா அது அறிமுகமான காலத்தில் வெகுவாக கவனத்தை ஈர்த்து இந்த வகை தேடல் பற்றி பரபரப்பாக பேச வைத்தது.

லைவ் பிளாஸ்மா அடிப்படையில் இசை தேடியந்திரமாக இருந்தது. தேடல் முடிவுகள் கோள்கள் போல தோன்றின. ஒவ்வொரு கோளும் ஒரு பாடகர் அல்லது இசைக்குழுவை குறித்தன. அவர்களுக்கு இடையிலான தொடர்பையும் தெரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் திரைப்பட தேடலையும் இந்த முறையில் வழங்கியது.

பிரவுசர் நீட்டிப்பு சேவையாக செயல்பட்ட கூல்ரிஸ் (Cooliris), தேடப்படும் இணைய பக்கங்களை புகைப்பட வரிசையாக அளித்தது. வரிசையாக இணையதளங்களின் முகப்பு பக்க காட்சிகளை பார்க்கலாம். அவற்றில் இருந்து தேவையானதை கிளிக் செய்யலாம். இந்த தேடியந்திரம் யாஹுவால் வாங்கப்பட்டு விட்டது. இந்த பிரிவில் முக்கியமாக விளக்கிய விவிஸ்மோ ஐ.பி.எம் நிறுவனத்தால் வாங்கப்பட்டுவிட்டது.

கார்ட்டூ தேடியந்திரம் கூகுள் மற்றும் யாஹு தேடல் முடிவுகளை மேக கூட்டங்களாக வழங்கியது. இன்னும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட காட்சி தேடியந்திரங்கள் அறிமுகமாயின. எல்லாமே புதுமையானவை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு சில உண்மையிலேயே முடிவுகளை காட்சிபடுத்திய விதத்தில் மாற்று அனுபவத்தை அளிக்க முற்பட்டன.

ஆனால், இவற்றில் பெரும்பாலானவை காணாமல் போய்விட்ட நிலையில் வார்த்தைகளால் மற்றும் இவற்றை விவரிப்பது கடினம் தான். ஆனால் இவற்றின் முகப்பு பக்க காட்சிகளை பார்ப்பதன் மூலம் ஓரளவு புரிந்து கொள்ளலாம். (பார்க்க - காட்சி தேடியந்திரம் பற்றிய பழைய கட்டுரைக்கான இணைப்பு.)

இந்த வகை தேடியந்திரங்கள் தேடல் பட்டியலுக்கு மாற்று அனுபவத்தை அளிக்க முற்பட்டன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். இவை வெறும் காட்சி வடிவில் மட்டும் செயல்படவில்லை, முடிவுகளை வரைபட வடிவில் சித்தரிப்பதன் மூலம் அவற்றுக்கு இடையிலான தொடர்பை புரிய வைக்கவும் முற்பட்டன.

இன்னொரு முக்கியமான விஷயம், இவை இணையதளங்களின் முன்னோட்ட வசதிக்கும் முன்னுரிமை அளித்தன. இணையதளங்களின் முகப்பு பக்கங்களை பார்க்க முடிவதால் இணையப்புகளை கிளிக் செய்வதற்கு முன்பாகவே அந்தப் பக்கத்தில் எந்த வகை தகவல்களை எதிர்பார்க்கலாம் என இதன் மூலம் உணர முடிந்தது. இந்த வகை முன்னோட்ட வசதியை இப்போது வெகு சில தேடியந்திரங்களே வழங்குகின்றன. இங்கு சுவாரஸ்யமான உப தகவல் - இத்தகைய இணையதள முன்னோட்ட வசதியை முதன் முதலில் ஆஸ்க் ஜீவ்ஸ் தான் பைனாகூலர் எனும் பெயரில் வழங்கியது.

காட்சி தேடியந்திரங்களின் மற்றொரு முக்கிய அம்சமாக இருந்தது, முடிவுகளை தொகுப்பாக வழங்குவது. கிளஸ்ட்டி இந்த வகையான தேடியந்திரம். முடிவுகளை குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில் தொகுத்து வழங்குவதன் மூலம் இரண்டாம் கட்ட தேடலை வழங்கின. கிளஸ்ட்டி இன்னமும் யிப்பி எனும் பெயரில் செயல்படுகிறது: http://yippy.com

மற்றொரு அருமையான காட்சி தேடியந்திரம் ஐபிலோரர். இது விக்கிபீடியா தகவல்களை வட்ட வடிவ வரைபடமாக உருவகப்படுத்தி காட்டுகிறது: http://eyeplorer.com

காட்சி தேடியந்திரங்கள் ஏன் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது ஆய்வுக்குறிய கேள்வி. ஆனால், அவை உண்டாக்கிய சாத்தியம் இன்னமும் அவசியமானதாகவே இருக்கிறது.

இணைப்புகள்:

> காட்சி தேடியந்திரங்கள் அறிமுக கட்டுரை: >Top Visual Search Engines: The Most Interesting Ways To Visually Explore Search Engine Results

> கிளஸ்ட்டி பற்றிய அறிமுகம்: >Overview of Clustering and Clusty Search Engine

> தேடியந்திர வலைப்பதிவாளர் பில் பிராட்லியின் >காட்சி தேடியந்திர அறிமுகங்கள்

- சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 13 - என்ன பாட்டு தேட?!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x