Published : 20 Nov 2020 02:04 PM
Last Updated : 20 Nov 2020 02:04 PM
டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸை இலவசமாகப் பயன்படுத்தலாம் என அந்தத் தளம் அறிவித்துள்ளது.
உலக அளவில் உள்ள முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃபிளிக்ஸ். பல பிரபலமான திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் ஆகியவை இந்தத் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவில் மாதம் ரூ.199 என்று ஆரம்பித்து ரூ.799 வரை 4 வகையான கட்டண அமைப்புகளை நெட்ஃபிளிக்ஸ் நிர்ணயித்துள்ளது.
அமேசான் ப்ரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 என இந்தியாவில் ஏற்கெனவே ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தங்களது தளம் செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கிறது என முன்னதாக நெட்ஃபிளிக்ஸ் தரப்பு கூறியிருந்தது
தற்போது தங்களது தளத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு தேதிகளில் அனைவரும் நெட்ஃபிளிக்ஸை இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரே ஒரு வார இறுதியில் இந்தியா முழுவதும் நெட்ஃபிளிக்ஸை இலவசமாகப் பயன்படுத்தக் கொடுக்கும்போது எங்களிடம் இருக்கும் அற்புதமான கதைகள் என்ன, சேவை என்ன, அது எப்படி வேலை செய்கிறது என்பதை புதிய பயனர்களுக்குச் சிறப்பாக எடுத்துச் செல்ல முடியும்.
உலகம் முழுவதிலிருமிருந்து அதிசயக்கத்தக்க படைப்புகளை இந்தியாவின் பொழுதுபோக்கு ரசிகர்களிடம் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம். இதனால்தான் ஸ்ட்ரீம் திருவிழா என்கிற இந்த இலவச நெட்ஃபிளிக்ஸ் சலுகையை அறிமுகம் செய்கிறோம்" என்று நெட்ஃபிளிக்ஸின் தலைமைத் தயாரிப்பு அதிகாரி க்ரெக் பீட்டர்ஸ் கூறியுள்ளார்.
இந்த இரண்டு நாட்களும் நெட்ஃபிளிக்ஸை இலவசமாகப் பயன்படுத்த netflix.com/StreamFest என்கிற முகவரிக்குச் சென்று, உங்களது பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை வைத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது.
அடிப்படைத் தரத்தில் நெட்ஃபிளிக்ஸின் காணொலிகளைப் பார்க்க முடியும். ஒரு முகவரியில் லாக் இன் செய்துவிட்டால் அதே முகவரியை வைத்து வேறொருவர், வேறொரு சாதனத்தில் நெட்ஃபிளிக்ஸைப் பார்க்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT