Published : 13 Nov 2020 11:52 AM
Last Updated : 13 Nov 2020 11:52 AM
இந்த வருடம் ரீவைண்ட் தொகுப்பு பகிரப்படாது என யூடியூப் தளம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், அந்த வருடம் யூடியூப் தளத்தில் பிரபலமான முகங்கள், காணொலிகளின் தொகுப்பை அந்தத் தளம் வெளியிட்டு வருகிறது. ரீவைண்ட் என்று அழைக்கப்பட்டு வரும் இந்தத் தொகுப்பு கடந்த பத்து வருடங்களாகத் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ஆனால், கரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த வருடம் இந்த ரீவைண்ட் தொகுப்பை வெளியிடப்போவதில்லை என யூடியூப் தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து யூடியூப் பகிர்ந்திருக்கும் அறிக்கை:
"2010ஆம் ஆண்டு ஆரம்பித்து எங்களது ஒவ்வொரு வருடத்தையும் ரீவைண்ட் (என்கிற வீடியோ தொகுப்போடு) முடித்திருக்கிறோம். இந்தத் தொகுப்பு அந்த வருடத்தில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளிகள், காணொலிகள், ட்ரெண்ட்கள் பற்றியது.
உங்களுக்கு அது பிடித்திருந்ததோ அல்லது 2018ஆம் ஆண்டு தொகுப்பு மட்டும் ஞாபகம் உள்ளதோ தெரியவில்லை. ஆனால் இந்தத் தொகுப்பு என்றுமே உங்களைக் கொண்டாடும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
2020ஆம் வருடம் வித்தியாசமாக இருந்திருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது போல இந்த வருடமும் ரீவைண்ட் தொகுப்பைப் பகிர்வது சரியாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. எனவே இந்த வருடம் ரீவைண்டுக்கு ஓய்வு தருகிறோம்.
2020ஆம் ஆண்டு நடந்த பல நல்ல விஷயங்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று எங்களுக்குத் தெரியும். மக்களை உற்சாகப்படுத்த, ஆறுதல் சொல்ல, சிரிக்க வைக்க நீங்கள் நிறைய வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். ஒரு கடினமான வருடத்தை முடிந்தவரை லேசாக்கியிருக்கிறீர்கள்.
நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்துக்கு நன்றி".
இவ்வாறு யூடியூப் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT