Published : 09 Oct 2015 02:51 PM
Last Updated : 09 Oct 2015 02:51 PM

ஃபேஸ்புக் லைக்கில் 6 வகை உணர்வுகளைப் பகிர புதிய வசதி

ஃபேஸ்புக்கில் 'டிஸ்லைக்' பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் டீம் ஈடுபட்டு வருகிறது.

அதன் முதல் படியாகவே, 'லைக்' பட்டன் மூலம் பயனாளர்கள் தங்களது 6 வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

ஃபேஸ்புக்கில் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதன் நோக்கத்தை தெரிவிக்கவோ இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. பயனாளிகள் பலரும் சோக நிகழ்வுகள், துக்கமான செய்தி போன்றவைக்கு 'லைக்' இடுவதில் ஏற்படும் இக்கட்டான நிலையை நிறுவனத்திடம் தெரிவித்து இதற்கு வழியை ஏற்படுத்த கோரி வந்தனர்.

அந்த வகையில், 'லைக்' பட்டனை போலவே 'டிஸ்லைக்'க்கு ஈடான வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த மாதம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்தார்.

இந்த நிலையில், முற்றிலும் டிஸ்லைக் என்பதாக அல்லாமல், மனிதர்களின் 6 விதமான உணர்வுகளைப் வெளிப்படுத்தும் விதத்தில் பயனாளிகளுக்காக, லைக் பட்டனையொட்டிய 6 வகையான குறியீட்டு பொம்மைகளுடன் பாப்-அப் பட்டன்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி அன்பு, ஹாஹா, யாஹ், வாவ், சோகம் மற்றும் கோபம் ஆகிய 6 வகையான பாப்-அப் பட்டன்களில் ஒன்றை பயனாளிகள் தங்களது லைக்குடன் க்ளிக் செய்து உணர்வுகளைப் பகிரலாம்.

எத்தனை 'லைக்'-குகள் என்பதை எண்ணிக்கையிட்டு காட்டும் அதேமுறையில், குறிப்பிட்ட கருத்துக்கான விதவிதமான மனநிலையை வகைப்படுத்திய எண்ணிக்கையும் வெளிப்படும்.

முதற்கட்டமாக இன்று முதல் அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.

'லைக்' பட்டனை க்ளிக் செய்ததும் அதனை வகைப்படுத்து 6 ஸ்மைலிகளை பயனாளிகளிகள் தேர்வு செய்து தங்களது மனநிலையை பகிரும் வகையில் இந்த புதிய முறை உள்ளது.

அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டு ஃபேஸ்புக் பயனாளிகளிடம் அவர்களது அனுபவத்தை கேட்டறிந்து, பின்னர் உலகம் முழுவதும் 'லைக்'- உடன் சேர்ந்த இந்த 6 பாப்-அப் பட்டன்களையும் முறைப்படி அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x