Last Updated : 05 Oct, 2020 02:20 PM

2  

Published : 05 Oct 2020 02:20 PM
Last Updated : 05 Oct 2020 02:20 PM

கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்: பேடிஎம் உருவாக்கியுள்ள புதிய ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனமே ப்ளே ஸ்டோர் போன்ற ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளது.

ஆண்ட்ராய்ட் மினி ஆப் ஸ்டோர் என்கிற இந்தத் தளம் இந்தியாவில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களது பொருட்களை மக்களிடம் எடுத்துச் செல்ல ஏதுவாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் தங்கள் தளத்தில் சூதாட்ட விதிமுறைகளை மீறியதாகக் கூறி ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை கூகுள் நீக்கியது. ஆனால், கூகுளின் ஒருதலைப்பட்சமான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நிர்பந்திக்கப்படுவதாகவும், அது சந்தையில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவதற்காக செயற்கையான ஒரு சூழலை உருவாக்கும் என்றும் பேடிம் குற்றம் சாட்டியிருந்தது.

அடுத்த சில மணி நேரங்களில் பேடிஎம் மீண்டும் ப்ளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டாலும் கூகுளுக்குச் சவால் விடும் விதமாக தங்களது பேடிஎம் கிரிக்கெட் லீக் ஆட்டத்தை அந்நிறுவனம் மீண்டும் கொண்டு வந்தது. இதில் யுபிஐ கேஷ்பேக், ஸ்க்ராட்ச் கார்ட் போன்ற சலுகைகளும் இருந்தன.

மேலும் இந்த கேஷ்பேக், ஸ்க்ராட்ச் கார்ட் சலுகைகள் இந்திய அரசு நிர்ணயித்த விதிமுறைகளுக்கு உட்பட்டே வைக்கப்பட்டுள்ளதாகவும் பேடிஎம் தெளிவுபடுத்தியுள்ளது. தொடர்ந்து தங்களுக்கென தனி ஆப் ஸ்டோரை பேடிஎம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

மேலும் இந்தத் தளத்தில் செயலிகளைப் பட்டியலிட, விநியோகிக்க எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது. கட்டணச் செயலிகளைப் பயனர்கள் பயன்படுத்த, பதிவிறக்கம் செய்ய பேடிஎம் வேலட், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, யுபிஐ, நெட் பேங்கிங், கார்ட் உள்ளிட்ட தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டீகாத்லான், ஓலா, ரேபிடோ, டாமினோஸ், நோப்ரோக்கர் உள்ளிட்ட பல பிரபல செயலிகள் தற்போது இந்த ஆப் ஸ்டோரில் இணைந்துள்ளன. பரிசோதனைக் கட்டத்தில் இருக்கும் இந்த ஆப் ஸ்டோருக்கு கடந்த மாதம் மட்டும் 1.2 கோடி பயனர்கள் வருகை தந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆப் ஸ்டோர் இளம் டெவலப்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், இந்தியாவின் ஒவ்வொரு ஆப் டெவலப்பருக்கும் ஒரு வாய்ப்பை இது உருவாக்கித் தருவதால் தான் பெருமையடைவதாகவும் பேடிஎம் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா கூறியுள்ளார். இது பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் ஒரு அங்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் போலவே ஸொமேட்டோ, ஸ்விக்கி போன்ற தளங்களும் ஐபிஎல் விளையாட்டை ஒட்டி கேஷ்பேக் சலுகை தருவதால் அந்த நிறுவனங்களுக்கும் கூகுள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x