Last Updated : 16 Sep, 2020 12:14 PM

 

Published : 16 Sep 2020 12:14 PM
Last Updated : 16 Sep 2020 12:14 PM

பில்கேட்ஸின் தந்தை காலமானார்

சான் பிரான்சிஸ்கோ

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பில்கேட்ஸின் தந்தையுமான வில்லியம் ஹெச்.கேட்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 94.

வாஷிங்டன் ஸ்டேட் பகுதியில் இருக்கும் கடற்கரை இல்லத்தில் வில்லியம் வசித்து வந்தார். வழக்கறிஞரான இவர் சமூக ஆர்வலராகவும் இருந்து பல நல உதவிகளைச் செய்துள்ளார். அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த வில்லியமின் உயிர் நேற்று முன்தினம் அமைதியாகப் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தன் தந்தை குறித்துப் பகிர்ந்துள்ள பில்கேட்ஸ், ''என் தந்தையின் ஞானம், தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவை உலக அளவில் பல மக்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு வயது ஆக ஆகத்தான் கிட்டத்தட்ட நான் செய்யும் அனைத்து விஷயங்களிலும் என் அப்பாவின் தாக்கம் மறைமுகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து சந்தோஷப்பட்டேன். மைக்ரோசாஃப்ட்டின் ஆரம்பக் காலங்களில் முக்கியமான கட்டங்களில் சட்டரீதியான ஆலோசனைகளைக் கேட்க என் அப்பாவைத்தான் அணுகினேன்.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இன்று இருக்கும் நிலை அப்பா இன்றி சாத்தியப்பட்டிருக்காது. எல்லாவற்றையும் விட, அறக்கட்டளையின் அறநெறிகளை அப்பா வகுத்தார். எங்களுடன் இணைந்து, விவேகமாகச் செயல்பட்டு, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டினார். பில்கேட்ஸின் மகனாக இருந்த அனுபவம் அற்புதமாக இருந்தது.

நீங்கள்தான் உண்மையான பில்கேட்ஸா என்று என் தந்தையிடம் கேட்பார்கள். உண்மை என்னவென்றால், என்னை எப்படி இருக்க வேண்டும் என்று முயல்கிறேனோ அது மொத்தமும் அவரிடம் இருந்தது. அப்பாவின் இழப்பை நான் ஒவ்வொரு நாளும் உணர்வேன்'' என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x