Published : 31 Aug 2020 03:18 PM
Last Updated : 31 Aug 2020 03:18 PM
பேடிஎம் மால் தளத்தின் பயனர் விவரங்களை ஒட்டுமொத்தமாக ஒரு குழு திருடியுள்ளதாகவும், அதை வைத்து பேடிஎம் மால் தளத்தைப் பணம் கேட்டு மிரட்டியிருப்பதாகவும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் பேடிஎம் தரப்பு இதை மறுத்துள்ளது.
சைபில் (cyble) என்கிற இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், ஒரு சைபர் கிரைம் குழு, ஜான் விக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. இது பேடிஎம் மால் செயலி, இணையதளம் இரண்டிலும் ஊடுருவி அத்தனை தகவல்களையும் திருடியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பேடிஎம் மால் தரப்பு இந்தத் தகவல்களை மீட்க, கேட்கப்பட்ட பணத்தைத் தரவுள்ளதாகவும் சைபில் கூறியுள்ளது. ஆனா இதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இப்படி ஒரு தளத்தின் தரவுகளைத் திருடி, பணம் கேட்டு மிரட்டுவது பல சைபர் கிரைம் குழுக்களின் வழக்கமான வேலை. பேடிஎம் தளத்தில் வேலை செய்யும் ஒருவரது உதவியுடன் தான் இந்தத் திருட்டு நடந்துள்ளதாக ஜான் விக் குழு கூறியுள்ளதாகவும் சைபில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பேடிஎம் மால் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். "எங்கள் பயனர்களைப் பற்றிய மற்றும் நிறுவனம் பற்றிய தரவுகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதை அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறோம். எங்கள் தரவுகள் திருடப்பட்டுள்ளன, ஹேக் செய்யப்பட்டுள்ளன என்று வந்து செய்திகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தியுள்ளோம். அந்த செய்திகள் அனைத்தும் பொய்யே.
நீங்கள் எதிர்பார்ப்பது போலவே எங்கள் தரவுகளின் பாதுகாப்புக்கு நாங்கள் அதிகம் செலவிடுகிறோம். மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி தரும் திட்டமும் வைத்திருக்கிறோம். வழக்கத்துக்கு மாறாக எங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதாவது வித்தியாசங்கள் தெரிந்தால் அவற்றை எங்கள் குழுவுடன் சேர்ந்து தீர்த்துவிடுவோம்" என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT