Published : 24 Aug 2020 02:19 PM
Last Updated : 24 Aug 2020 02:19 PM
நோக்கியா நிறுவனம் இந்தியாவில் புதிதாக இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இது பற்றிய காணொலி முன்னோட்டம் ஒன்றை அந்நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தக் காணொலியில் புதிய மொபைலின் தோற்றம் இடம்பெறவில்லை. மாறாக மொபைல் அளவிலான ஒரு கோடு மட்டுமே வரையப்பட்டுத் தோன்றுகிறது. அந்த அளவை வைத்துப் பார்க்கும்போது இது நோக்கியா சி 3 மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது. இன்னொரு மொபைல், அடிப்படை வசதிகள் கொண்ட கீபேட் மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது.
ஹெச் எம் டி க்ளோபல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜூஹோ சர்விகாஸ், "இந்தியாவில் இருக்கும் எங்கள் அன்பார்ந்த ரசிகர்களே. இந்தியாவில் மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் நிலப்பரப்பில் புதிய அலையைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள். விரைவில் வெளியிடப்படும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இரண்டு புதிய மொபைல்கள் பற்றிய இன்னொரு காணொலியையும் பகிர்ந்துள்ளார்.
நோக்கியா சி3 ஏற்கெனவே சீனாவில் அறிமுகமாகியுள்ள ஆரம்ப நிலை அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன். 5.99 தொடு திரை, 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி கொள்ளளவைக் கொண்டது. இதில் 8 மெகா பிக்ஸல் பிரதான கேமராவும், 5 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி வழியாக சார்ஜிங் செய்யும் வசதி கொண்ட இந்த மொபைலில் மாற்றக்கூடிய வகையில் 3040எம்ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT