Published : 10 Aug 2020 07:23 PM
Last Updated : 10 Aug 2020 07:23 PM
வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் ஒரே கணக்கை 4 வெவ்வேறு கருவிகளில் வைத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு கருவியில், ஒரு எண்ணை வைத்துப் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பை இன்னொரு கருவியில் பயன்படுத்த முடியாது.
அதிகாரபூர்வமற்ற சில செயலிகள் வெவ்வேறு கருவிகளில் பயன்படுத்தும் வசதியைத் தருகிறது என்றாலும் வாட்ஸ் அப் தரப்புக்கு நீண்ட நாட்களாக இந்த வசதியை ஏற்படுத்தித் தரும்படி பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்பின் சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் இணையதளம் ஒன்று, ஒரு வாட்ஸ் அப் கணக்கை வைத்துக்கொண்டு பல்வேறு கருவிகளில் பயன்படுத்தும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. அதிகபட்சம் ஒரே நேரத்தில் ஒரு கணக்கை 4 வெவ்வேறு கருவிகளிலிருந்து இயக்குவதற்கான வசதியின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது பயனர்கள் இன்னொரு கருவியில் வாட்ஸ் அப்பை அதே கணக்கை வைத்துப் பயன்படுத்த வேண்டுமென்றால் உரையாடல் வரலாற்றை (சாட் ஹிஸ்டரி) காப்பி செய்துகொள்ள வேண்டும். ஆனால் புதிய வசதியில் இதற்கான அவசியம் இருக்காது.
ஆனால், பயனருக்கு வரும் செய்தி, அவர் பயன்படுத்தும் 4 கருவிகளுக்கும் அனுப்பப்படும். அந்த உரையாடல்கள் ஒரே நேரத்தில் நான்கு கருவிகளிலும் சேமிக்கப்படும்.
இன்னொரு பக்கம் ஒரே நேரத்தில் ஐஃபோன் மற்றும் ஐபேட் என இரண்டு கருவிகளிலும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த ஏதுவாக ஒரு புதிய செயலியை வாட்ஸ் அப் உருவாக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT