Published : 28 Sep 2015 02:55 PM
Last Updated : 28 Sep 2015 02:55 PM

வாட்ஸ்ஆப் வழி சேவை: மீதமான உங்கள் உணவால் ஏழை பசி தீரட்டுமே!

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகி வரும் மூன்று இளைஞர்ள் இணைந்து, பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவளிக்க செயலி ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். செயலி தயாராக இன்னும் சில நாட்கள் இருந்தாலும், வாட்ஸ்ஆப் மூலமாக ஏற்கனவே தன்னார்வலர்கள் சிலர் இவர்களோடு இணைந்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிஃப், நரேஷ்வர் சிவனேசன், ஃபஹத் கலீல் என்ற மூன்று இளைஞர்கள் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். இவர்கள் மூவருமே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படித்து வருகின்றனர். மூவருமே மென்பொருள் துறையில் வேலை செய்தவர்கள்.

விழாக்களிலோ, வீட்டு விசேஷங்களிலோ உணவு வீணாகும் என்ற நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் இவர்களைத் தொடர்பு கொண்டால் போதும். தங்கள் தன்னார்வலர்கள் உதவியோடு அந்த உணவை பெற்றுக் கொண்டு, அதை வீணாக்காமல், பட்டினியால் தவிப்பவர்களுக்கு அளிக்கின்றனர். இதன் மூலம் தற்போது தினமும் ஆயிரக்கணக்கான ஆதரவற்றவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

மாநகராட்சியில் போடப்படும் 5000 டன் குப்பையில், 10 சதவீதம் உணவுக் கழிவுகளாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் பட்டியலிடுகிறது.

இது குறித்து ஆசிஃப் கூறும்போது, "உணவு மனிதர்களின் அடிப்படை தேவை. நம் தேசத்தில் பலர் உணவுக்காக பிச்சையெடுத்து வரும் வேளையில், வீடுகளிலும், உணவகங்களிலும், அங்காடிகளிலும், அலுவலகங்களிலும் நாம் நிறைய உணவை வீணடிக்கிறோம் என்பது வருந்தத்தக்கது.

எனவே, உணவை வீணாக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது 99625 18992 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டாலோ, வாட்ஸ்ஆப்பில் தகவல் தந்தாலோ போதும். நாங்கள் வருவோம். உரியவர்களின் பசி போக்க உங்கள் உணவைப் பகிர்வோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x