Published : 05 Jun 2020 03:34 PM
Last Updated : 05 Jun 2020 03:34 PM
சீக்கியர்களைக் குறிக்கும் #sikh என்கிற ஹாஷ்டேகை மூன்று மாதங்களாக முடக்கியிருந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், தற்போது அந்த முடக்கத்தை நீக்கியுள்ளன.
சமூக வலைதளங்களில் ஒரு தலைப்பின் கீழ் வரும் கருத்துகள், பதிவுகள் குறிப்பிட்ட சில ஹாஷ்டேகுகளை வைத்துப் பகிரப்படும். அந்த ஹாஷ்டேகைத் தொடர்ந்தாலே அது தொடர்பான பதிவுகளை அனைவரும் பார்க்க முடியும் என்பதால் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வப்போது சர்ச்சைக்குரிய சில வார்த்தைகள் ஹாஷ்டேக் வடிவில் ட்ரெண்ட் ஆகும் போது அந்த வார்த்தைகளின் பயன்பாடு முடக்கப்படும்.
அப்படி கடந்த மார்ச் 7-ம் தேதி, ஒழுங்காகச் சரிபார்க்கப்படாத ஒரு புகாரின் அடிப்படையில் #sikh என்கிற ஹாஷ்டேகை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டு தளங்களும் முடக்கியிருந்தன. தற்போது இந்த முடக்கத்தை நீக்கியிருக்கும் இன்ஸ்டாகிராம் தரப்பு, புதன்கிழமை அன்று தான் இப்படி ஒரு முடக்கத்தைத் தாங்கள் செய்திருப்பது தெரியவந்ததாக வருத்தம் தெரிவித்துள்ளது.
"உங்கள் பொறுமைக்கு நன்றி. இந்தப் பிரச்சினை குறித்து விசாரித்தோம். மார்ச் 7-ம் தேதி அன்று, ஒரு புகாரை எங்கள் அணி ஒழுங்காக சரிபார்க்கவில்லை என்பதால் இந்த ஹாஷ்டேகுகள் முடக்கப்பட்டன.
இது சீக்கிய சமூகத்தினருக்கு மிகவும் முக்கியமான, கடினமான விஷயம். நாங்கள் ஹாஷ்டேகை வடிவமைத்ததே மக்கள் ஒன்றிணைந்து வந்து ஒருவரோட ஒருவர் பகிர்ந்து கொள்ளத்தான். ஒரு சமூகத்தின் குரலை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. இது மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இன்று (புதன்கிழமை) எங்களுக்கு அந்தச் சமூகத்தினரிடமிருந்து வந்த பின்னூட்டத்துக்குப் பிறகுதான் இந்த ஹாஷ்டேகுகள் முடக்கப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அந்த முடக்கத்தை நீக்கிவிட்டோம். எங்கள் செயல்முறை தோல்வியடைந்துவிட்டிருக்கிறது. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்" என்று இன்ஸ்டாகிராம் விளக்கம் கொடுத்துள்ளது.
ஆனால், சில பயனர்கள் இது ஏன் எப்படி நடந்தது என்று விரிவாக விளக்கவேண்டும் என்று கோரியுள்ளனர். முன்னதாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேகை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்த முடியவில்லை என்று புகார்கள் எழுந்ததையொட்டி அந்தப் பிரச்சினையைச் சரி செய்ததாக இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT