Published : 04 Jun 2020 01:52 PM
Last Updated : 04 Jun 2020 01:52 PM
கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தை எதிர்த்து அமெரிக்காவில் தேசிய அளவில் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஆல்ஃபபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இன ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை விளம்பர மானியமாகவும் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
"எங்கள் நீண்ட நாள் நண்பர்கள் Center for Policing Equity மற்றும் the Equal Justice Initiative ஆகிய அமைப்புகளுக்கு தலா ஒரு மில்லியன் டாலர்களை வழங்குகிறோம். Google.org தளத்தின் மூலம் தொழில்நுட்ப உதவியும் தரவிருக்கிறோம்.
எங்கள் கறுப்பினச் சமூகம் பாதிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் நம்பும் விஷயத்துக்காக எப்படிக் குரல் கொடுப்பது, ஆதரவைத் தெரிவிக்க எங்களுக்குப் பிடித்த மக்களிடம் எப்படிச் சென்று சேர்வது என எங்களில் பலரும் பல வழிகளைத் தேடி வருகிறோம்" என்று சுந்தர் பிச்சை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர கூகுள் ஊழியர்கள், இழந்த கறுப்பின மக்களின் உயிர்களுக்குக் கவுரவம் செலுத்தும் வண்ணம் 8 நிமிடங்கள் 46 நொடி, மவுனத்தைக் கடைப்பிடித்தனர். இந்த காலநேரம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்படுவதற்கு முன்பு அவர் தன் உயிருக்காகப் போராடிய காலநேரம். ஃப்ளாய்ட் உள்ளிட்ட பலர் மீது இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கான நினைவூட்டல் இது என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். மேலும் நீண்ட காலத் தீர்வுக்காக கறுப்பின சமூகத்தோடு இணைந்து கூகுள் நிறுவனம் பணியாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் நிதியைத் தாண்டி அதன் ஊழியர்களும் மொத்தமாக 2.5 மில்லியன் டாலர்களை நிதியாகக் கொடுத்துள்ளனர். இதே அளவு நிதியை கூகுளும் அதோடு சேர்த்துக் கூடுதலாகக் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கூகுள் நிறுவனம் அளித்துள்ள நிதியிலேயே இதுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து வருடங்களில் இனவாத நீதி தொடர்பான நடவடிக்கைகளுக்கு கூகுள் நிறுவனம் இதுவரை 32 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகக் கொடுத்துள்ளது. முன்னதாக ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம், அமெரிக்காவில் கூகுள் மற்றும் யூடியூப் முகப்புப் பக்கங்களில் கருப்பு ரிப்பன் வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment