Last Updated : 17 Apr, 2020 04:55 PM

 

Published : 17 Apr 2020 04:55 PM
Last Updated : 17 Apr 2020 04:55 PM

டிக்டாக்கில் புதிய வசதி: பெற்றோர் தங்கள் பக்கத்தை தங்கள் பிள்ளைகளின் பக்கத்தோடு இணைக்கலாம் 

டிக்டாக் செயலியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்களது கணக்குப் பக்கத்தை தங்கள் குழந்தைகளின் பக்கத்தோடு பெற்றோர்கள் இணைத்துக் கொள்ளலாம்.

டிக்டாக் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று. சில நொடிகள் ஓடுகிற வீடியோக்களை யாரும் பதிவு செய்து இதில் பகிரலாம். பிரபலமான வசனங்கள், பாடல்கள், காட்சிகள் என அவற்றின் ஒலியை மட்டும் எடுத்து வைத்து அதற்கு வாயசைத்தும் நடித்து பதிவு செய்து பகிரலாம்.

ஆனால் எல்லா நவீனக் கால டிஜிட்டல் சேவைகளைப் போல டிக்டாக்கிலும் எல்லா வயதினருக்கும் பொருந்தாத பல விஷயங்கள் உலவுகின்றன. குறிப்பாக எல்லா வயதினருக்கும் ஒவ்வாத காணொலிகள் காணக்கிடக்கின்றன. தற்போது இந்தப் பிரச்சினையைக் கையாள புது வசதியை டிக்டாக் அறிமுகம் செய்துள்ளது.

குடும்ப இணைப்பு (family paring) என்ற இந்த வசதியின் மூலம் தங்கள் பிள்ளைகளின் கணக்குடன் தங்கள் கணக்குகளைப் பெற்றோர் இணைத்துக் கொள்ளலாம். பிறகு எவ்வளவு நேரம் பிள்ளைகள் டிக்டாக்கை உபயோகிக்கின்றனர், நேரடியாகச் செய்து அனுப்புதல் உள்ளிட்டவற்றை பெற்றோரால் கட்டுப்படுத்த முடியும். இதை தங்கள் மொபைலிலிருந்தே கூட பெற்றோர்கள் செய்யலாம். இதற்கு முன், பிள்ளைகள் பயன்படுத்தும் மொபைலில் இந்த கட்டுப்பாடுகளைச் செய்வது போல வசதி தரப்பட்டிருந்தது.

டிக்டாக் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "இப்படி குடும்பத்தினரை இணைக்கும் வசதி எங்கள் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது. எங்கள் செயலியின் தனித்துவமான அம்சங்களைப் பலரும் உபயோகிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. தங்கள் பதின்ம வயது பிள்ளைகளின் இணைய அனுபவத்தைச் சிறப்பாக வழிநடத்தப் பெற்றோருக்கு வசதி ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஒரு பகுதியே இந்த வசதியும். அவர்களை வழிநடத்தும் அதே நேரத்தில் இணையப் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இணைப்பு வசதியிலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், இந்த இணைப்புக்கு பிள்ளைகளின் பக்கத்திலிருந்து ஒப்புதல் வர வேண்டும். அதே போல இப்படி இணைக்கப்பட்டிருக்கும் பெற்றோரின் கணக்கை எப்போது வேண்டுமானாலும் பிள்ளைகளால் நீக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x