

கரோனா வைரஸ் பரவுவதால் ஆப்பிள் ஐபோன் விநியோகம் உலக அளவில் பாதிப்படையவுள்ளது. இதை அந்த நிறுவனமே அறிவித்துள்ளது.
மார்ச் மாத காலாண்டில் ஐபோனின் விநியோகம் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தனது வலைப்பூவில் பகிர்ந்துள்ளது. மேலும், சீனாவில் ஆப்பிள் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் இருக்கும் ஆப்பிள் கடைகளும், ஆப்பிள் பொருட்களை விற்கும் கடைகளும் கரோனா பாதிப்பால் மூடப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
ஆப்பிள் பொருட்களின் மிகப்பெரிய தயாரிப்பு இடங்களில் சீனாவும் ஒன்று. வூஹான் பகுதியில் கரோனா பாதிப்பால் தினசரி வாழ்க்கை மட்டுமல்ல, வியாபாரம், சுற்றுலா, பயணம் என பல விதங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கரோனா பரவுவது கண்டறியப்பட்டதால், அங்கு நடைபெறவிருந்த சர்வதேச மொபைல் மாநாடு ரத்தானது குறிப்பிடத்தக்கது.