Published : 01 Nov 2019 04:05 PM
Last Updated : 01 Nov 2019 04:05 PM

இனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்

சான் ஃபிரான்சிஸ்கோ

பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இந்த வசதியைப் பெறலாம். உலகளவில் பெருமளவில் வாடிக்கையாளர்களை தன்வசப் படுத்தி வைத்துள்ள வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்தே பல்வேறு புதுமைகளை அதில் புகுத்தி வருகிறது.

அந்த வரிசையில் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதி முன்னரே ஐஓஎஸ் போன்களில் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் இதனை கொண்டுவந்துள்ளனர்.

இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வியாழக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், "ஆண்ட்ராய்டு போன்களுக்காக ஃபிங்கர் பிரின்ட் வசதியை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் பயன்பாட்டாளர்கள் ஹேக்கர்கள், குடும்ப உறுப்பினர்கள், பிரிந்து சென்ற காதல் உறவுகளிடமிருந்து தங்களின் உரையாடல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டச் ஐடி, ஃபேஸ் ஐடி வசதியை ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தினோம். தற்போது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்காக கைரேகை பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் புதிய வெர்சனை டவுன் லோட் செய்தால் போதும் இந்த வசதியைப் பெறலாம்.

செட்டிங்க்ஸுக்குச் சென்று, அக்கவுன்ட் பகுதியை க்ளிக் செய்து அதில் ப்ரவைசி என்பதை க்ளிக் செய்தால் ஃபிங்கர் பிரின்ட் லாக் என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத்தேர்வு செய்தால் போதும் உங்கள் வாட்ஸ் அப் செயலியை உங்களைத்தவிர யாரும் திறக்க இயலாது (tap Settings, go to Account, then Privacy and Fingerprint Lock. Turn on Unlock with fingerprint, and confirm your fingerprint)" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்துவரும் விஞ்ஞான உலகில் ஒருவரது அந்தரங்கம் பாதுகாக்கப்படுவது சிரமமான ஒன்று. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் பாதுகாப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுத்த இந்த வசதி பெரிதும் உதவும் என பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x