Published : 27 Sep 2019 11:57 AM
Last Updated : 27 Sep 2019 11:57 AM
உலகின் மிகப் பெரிய தேடுதளமான கூகுள் நிறுவனம் தனது 21-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி, புதிய கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது.
இதே நாள், செப்டம்பர் 27 அன்று, 1998-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டைச் சேர்ந்த பி.ஹெச்.டி. மாணவர்களான செர்ஜே பிரின் மற்றும் லாரன்ஸ் பேஜ் ஆகியோர், மிகப்பெரிய தேடுதளமான கூகுளை உருவாக்கினர்.
ஒன்று என்ற எண்ணுக்குப் பிறகு 100 பூஜ்ஜியங்களை இட்டால் கிடைக்கக் கூடிய பெரிய எண்ணைக் குறிக்கும் 'கூகல்' என்ற வார்த்தையிலிருந்து அவர்கள் தங்களது தேடுதளத்திற்கு கூகுள் என பெயரிட்டனர். மேலும், அந்த தேடுதளத்தில் உள்ள தகவல்கள் உலக அளவில் பயன்படுத்தக் கூடியதாகவும், சர்வதேச அளவில் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என அவர்கள் கருதினர். 'தீமைகள் செய்ய வேண்டாம்' என்பதைக் குறிக்கும் 'டோண்ட் பீ ஈவில்' என்பதையே கூகுள் நிறுவனம் தங்களது இலக்காகக் கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய 4 தொழில்நுட்ப நிறுவனங்களுள் கூகுள் நிறுவனமும் அடங்கும். மற்றவை, அமேசான், ஆப்பிள், முகநூல் நிறுவனங்களாகும். கூகுள் தற்போது 100 மொழிகளில் செயல்படுகிறது. 'கூகுள்' என்ற வார்த்தை, ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியிலும், மெரியம் வெப்ஸ்டர் அகராதியிலும் இடம்பெற்றுள்ளது. இதற்கு 'கூகுளைப் பயன்படுத்தி தகவல்களைத் தேடுதல்' என்பது அர்த்தமாகும்.
கூகுள் டூடுலும், இந்த தேடுதளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு பகுதியாக இருக்கிறது. 1998-ம் ஆண்டு 'பர்னிங் மேன்' திருவிழாவைக் கொண்டாடும் விதத்தில் முதன்முதலாக கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டது. இது, செர்ஜே பிரின் மற்றும் லாரன்ஸ் பேஜ் ஆகியோராலேயே வடிவமைக்கப்பட்டது. பிறகு, கூகுள் டூடுல் ஒப்பந்ததாரர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டது. தற்போது, கூகுள் டூடுல் அந்நிறுவனத்தின் 'டூட்லர்ஸ்' எனப்படும் ஊழியர்களாலேயே வடிவமைக்கப்படுகிறது.
அக்டோபர் 2016 வரை, கூகுள் நிறுவனம் 40 நாடுகளில் 70 நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. இணையதளங்களின் தரம் மற்றும் அதனை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அளவிடும் அலெக்ஸா, கூகுள் தேடுதளம் உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் இணையதளம் எனப் பட்டியலிட்டுள்ளது. கூகுள் சேவைகளின் மற்ற இணையதளங்களான யூடியூப், பிளாக்கர் உள்ளிட்டவையும், அதிகம் பார்க்கப்படும் 100 இணையதங்களுள் ஒன்றாக உள்ளன.
காப்புரிமை, தணிக்கை, வரி தவிர்ப்பு, தனியுரிமை உள்ளிட்ட பிரச்சினைகளில் கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது.எனினும், ஆண்டுதோறும் பல கோடி மக்களுக்கு அவர்கள் தேடும் கேள்விகளுக்கான பதில்களை கூகுள் தேடுதளம் தருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT