Published : 30 May 2015 03:12 PM
Last Updated : 30 May 2015 03:12 PM
உலக மொழியாக அங்கீகரிக் கப்பட்டுவிட்டது இணைய மொழி. அதற்கு வலுசேர்க்க இமோஜிகளில் புதிய உருவ எழுத்துகள் அறிமுகமாக உள்ளன. கவுபாய் தொப்பி முகம், ஸ்கூட்டர், நடனமாடும் மனிதன், கைகுலுக்கல் என இளைய தலைமுறையின் காட்சி மொழியை மெருகூட்ட மேலும் 38 புதிய இமோஜி (emoji) எழுத்துகள் அடுத்த ஜூனில் வரப்போகின்றன.
இணையத்தில் பயன்படுத்தும் எழுத்துருக்களைத் தர நிர்ணயம் செய்யும் யூனிகோட் கூட்டமைப்பின் இமோஜி குழு இதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட புதிய இமோஜிகள் கீபோர்டுகளுக்கும் டச்பேடுகளுக்கும் வருகை தர உள்ளன. அடுத்த அப்டேட்டாக இமோஜி 9.0, 38 எழுத்துகளுடன் அமைய உள்ளது. செல்ஃபிக்கான உருவம், உடல் நலம் சரியில்லை என உணர்த்தும் உருவம், போன் பேசுவதை உணர்த்தும் உருவம் இப்படிப் பல புதிய இமோஜிக்கள் இந்தப் புதிய பட்டியலில் அடங்கும்.
சுறா, நரி, வாத்து எனப் பல விலங்குகளும் இமோஜி வடிவம் எடுக்கப்போகின்றன. இமோஜி ரசிகர்களிடம் இருந்துவந்த கோரிக்கை மற்றும் இதர அம்சங்களைப் பரிசீலித்து இத்தகைய புதிய இமோஜிகளுக்கு ஓகே சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக செல்ஃபிக்கான இமோஜிதான் இதுவரை அதிகபட்சமாகத் தேடப்பட்டிருக்கிறது. இதற்கான பட்டியலை யூனிகோடின் இமோஜி குழு வெளியிட்டுள்ளது. ( >http://www.unicode.org/L2/L2015/15054r4-emoji-tranche5.pdf )
இமோஜி என்பது உலகச் சரித்திரத்தில் வேகமாக வளரும் காட்சி மொழி என பிரிட்டன் ஆய்வாளர் வியவியான் ஈவன்ஸ் (Vyvyan Evans) கூறிய அதே நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது அழகான தற்செயல்தான். உங்கள் இமோஜி அறிவைப் பரிசோதித்துக்கொள்ளும் வினாடி வினாவையும் வியவியான் ஈவன்ஸ் உருவாக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT