Published : 19 May 2014 04:02 PM
Last Updated : 19 May 2014 04:02 PM

இது செல்ஃபிகளின் காலம்!

ஆக்ஸ்போர்டு அகராதியால் 2013-ம் ஆண்டின் சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு செல்ஃபி (Selfie) உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கிறது. அநேகமாகக் கடந்த ஆண்டில் அதிகமாக இளைஞர்களிடம் புழங்கிய சொல்லும் செல்ஃபியாகத்தான் இருக்கும். பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை இந்த செல்ஃபி ஃபீலியாவில் சிக்காதவர்களே இல்லை. அதிலும், சமூக வலைதளங்களில் அதிகமாக செல்ஃபிக்களைப் போஸ்ட் செய்து சந்தோஷப்படுகிறார்கள் இளைய தலைமுறையினர். அவர்கள் எடுக்கும் செல்ஃபிக்களின் நேர்த்தியையும் புதுமையையும் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இளசுகளின் மனங்களை செல்ஃபி எப்படி அள்ளிக்கொண்டது? இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்:

ஏன் செல்ஃபி?

வேறு யாராவது நம்மைப் புகைப்படம் எடுக்கும்போது நினைத்த மாதிரி எல்லாம் போஸ் கொடுக்க முடியாது. ஆனால், செல்ஃபியில் எப்படி வேண்டுமானாலும் போஸ் கொடுக்கலாம். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

செல்ஃபி தருணம்

மகிழ்ச்சியாக இருக்கும்போது கட்டாயம் செல்ஃபி எடுக்கத் தோன்றும். எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பும் நிகழ்வுகள், நண்பர்களுடன் புதிதாக எங்காவது செல்லும்போது, ரயில் பயணங்கள் போன்றவை செல்ஃபிக்கு ஏற்ற தருணங்கள்.

செல்ஃபி பகிர்தல்

நான் செல்ஃபிக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டாலும் , பெரும்பாலும் அவற்றை என் சுய வெளிப்பாட்டிற்காகவே எடுக்கிறேன்.

செல்ஃபி விமர்சனம்

என் செல்ஃபிக்களுக்கு நண்பர்களிடம் இருந்து பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன. அதே சமயம் சிலர் கேலியும் செய்திருக்கிறார்கள்.

- டி. அனுஷா, இரண்டாம் ஆண்டு, விஸ் காம்

ஏன் செல்ஃபி?

நம் அழகை எப்படிக் கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறோமோ அப்படித்தான் செல்ஃபிகள் எடுப்பதும். நம்மை நாமே ரசிக்கவைக்கும் செல்ஃபி. அத்துடன் கூச்சமின்றி விரும்பியபடி, யாரையும் எதிர்பார்க்காமல் படங்களை எடுத்துத் தள்ளலாம்.

செல்ஃபி தருணம்

புதிய ஹேர்ஸ்டைல் மாற்றியவுடன், புத்துணர்ச்சியுடன் உணரும்போது, நண்பர்களுடன் செலவழிக்கும் உற்சாகமான பொழுதுகளில் நிச்சயம் செல்ஃபி எடுப்பேன்.

செல்ஃபி பகிர்தல்

செல்ஃபிகள் என்னை நல்லவிதமாக உணரவைக்கின்றன. ஆனால், நான் அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்வதில்லை.

செல்ஃபிகள் என்னை நல்லவிதமாக உணரவைக்கின்றன. ஆனால், நான் அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்வதில்லை.

செல்ஃபி விமர்சனம்

இதுவரை என் செல்ஃபிக்களுக்காக எந்த விமர்சனத்தையும் சந்தித்தில்லை.

- டுஃபேல் அஹமது, இரண்டாம் ஆண்டு, விஸ் காம்

ஏன் செல்ஃபி?

என்னை நானே நேசிப்பதற்கு செல்ஃபிகள் உதவுகின்றன. அத்துடன் என் தன்னம்பிக்கையை உயர்த்துவதிலும் செல்ஃபிகளின் பங்கு கணிசமாக உள்ளது.

செல்ஃபி தருணம்

எதாவது ஒரு வேலையைச் சிறப்பாக செய்து முடித்த பிறகு எப்படியும் ஒரு செல்ஃபியாவது எடுத்துவிடுவேன்.

செல்ஃபி பகிர்தல்

நம் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என் செல்ஃபிகளை நான் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வேன்.

செல்ஃபி விமர்சனம்

ஒரேயடியாக செல்ஃபிகளை எடுத்துக்கொண்டிருப்பதும் அருகில் இருப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால், நான் அளவுடன்தான் செல்ஃபிகளை எடுப்பேன்.

- ஆர். அபிநயா, இரண்டாம் ஆண்டு, பி.காம்

தண்ணீரில் பிம்பத்தைப் பார்க்க மனிதன் என்றைக்குக் கற்றுக்கொண்டானோ அன்றிலிருந்தே பிம்பங்கள் மீது மனிதர்களுக்கு அலாதி பிரியம். நவீனத் தொழில்நுட்பம் அதற்கான வழிமுறையை எளிதாக்கியிருக்கிறது. அதனால் கையில் செல்ஃபோன் இருக்கும்போது தன்னைத் தானே இளைஞர்கள் இப்படி போட்டோ எடுத்து மகிழ்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x