Published : 04 Jul 2019 10:26 AM
Last Updated : 04 Jul 2019 10:26 AM

முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப்: பரிதவித்துப்போன நெட்டிசன்கள்

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்  நேற்று (03.07.19) உலகம் முழுவதும் முடங்கியதால் நெட்டிசன்கள் பெரும் பரபரப்புக்கு ஆளானார்கள்.

பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப்போயுள்ளது ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்.

காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இவற்றைத் திறந்து நிலைத்தகவல்கள், புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து, மற்றவர்களின் பதிவுகளைப் படிக்கவில்லையென்றால் சிலருக்குத் தூக்கம் வராது.

பல தொழில்கள் கூட சமூக வலைதளங்களை நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதனால் இவற்றில் ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அது இணையத்தில் உலகளாவிய அளவில் ட்ரெண்டாவது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று சமூக வலைதளங்களிலும் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்வதில் நேற்று பிரச்சினை ஏற்பட்டது.

 உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு புகார்கள் குவியத் தொடங்கின. நேற்று (03.07.19) காலை முதலே நெட்டிசன்கள் இந்தப் பிரச்சினை குறித்து புலம்பித் தள்ளினர். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட இந்த சிக்கல் ட்விட்டரில் #facebookdown #instagramdown #whatsappdown என்ற ஹேஷ்டேக் மூலம் உலக அளவில் ட்ரெண்டானது.

பின்னர் உலகம் முழுவதும் நெட்டிசன்களைப் பரிதவிக்க வைத்த இந்தப் பிரச்சினை இன்று அதிகாலை சரி செய்யப்பட்டது. இதை  ஃபேஸ்புக் நிறுவனம் இன்று (04.07.19) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “முன்னதாக இன்று சில மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் எங்களுடைய சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 100% அனைவருக்கும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x