Last Updated : 07 Jul, 2017 12:06 PM

 

Published : 07 Jul 2017 12:06 PM
Last Updated : 07 Jul 2017 12:06 PM

இளமை. நெட்: ஐபோனுக்கு வயது 10! - ஒரு பின்னோக்கிய பார்வை

ஐபோன் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஐபோனை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனத்துக்கும் அதன் அபிமானிகளுக்கும் மட்டுமல்ல, பொதுவாகவே தொழில்நுட்ப உலகில் ஆர்வம் கொண்ட எவருக்குமே இது ஒரு மைல்கல் நிகழ்வுதான். ஐபோனை மையமாக கொண்டு எழும் நினைவலைகளை தாங்கி வரும் எண்ணற்ற கட்டுரைகள், பதிவுகளில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம். ஐபோன் முதலில் அறிமுகமானபோது முன்வைக்கப்பட்ட கருத்துகளில் தொடங்கி, ஐபோன் அறிமுகமான பின்னணி கதை வரை எத்தனை விதமான செய்திகளை மையமாக கொண்டு கட்டுரைகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

ஆனால், ஐபோன் தொழில்நுட்ப உலகில் ஏற்படுத்திய தாக்கத்தையும், கொண்டு வந்த மாற்றங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை, கொண்டாடுவதற்கே அதிகம் உள்ளது என்பதை தொழில்நுட்ப ஆர்வலர்கள் புரிந்துகொள்ளலாம்.

ஐபோன், ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றி என்பதை மீறி, ஒரு சாதனமாக அது ஏற்படுத்திய தாக்கம் மறுக்க முடியாது. ஐபோனுக்கு பிறகுதான் ஸ்மார்ட்போன் உலகை எப்படி மாற்றியிருக்கிறது? உள்ளங்கையிலேயே இணையத்தை எளிதாக அணுக முடிகிறது, பூமியை வரைபடமாக பார்த்து இருப்பிடத்தை உணர முடிகிறது, இரண்டு விரல்களால் திரையில் உள்ள தோற்றத்தை பெரிதாக்க முடிகிறது, ஒரு விரலால் தள்ளிவிட்டால் காட்சிகள் மாறுகின்றன. இப்படி ஸ்மார்ட்போனில் நம்மை அறியாமல் பழகிவிட்ட பல வசதிகளுக்கு ஐபோன்தான் மூலக்காரணம்.

ஐபோனோடு ஸ்மார்ட்போன் உலகமும் வளர்ந்திருக்கிறது. ஐபோனும் வளர்ந்திருக்கிறது.

2007-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி அமெரிக்காவில் ஐபோன் முதல் முறையாக விற்பனைக்கு வந்தபோது, தற்போது ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் நாம் காணக்கூடிய பல அம்சங்களை அது கொண்டிருக்கவில்லை. 3ஜி இணைய வசதி இல்லை, அதன் பேட்டரி ஆயுள் ஒரு நாளுக்கு மேல் கிடையாது, காமிரா திறன் 2 மெகாபிக்சல்தான் எனத் தொடங்குகிறது கார்டியன் நாளிதழின் ஐபோன் பத்தாண்டு அலசல் கட்டுரை. அதன் விலையும் அதிகம் என்பதோடு, 4 ஜிபி கொள்ளளவுதான் கொண்டிருந்தது. இருப்பினும் ஐபோன் அருமையான கையடக்க சாதனமாகக் கவர்ந்தது.

இதற்கு முக்கிய காரணம், ஆப்பிளின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ். ஒரு மாயாவியைப்போல மேடையில் நின்றுகொண்டு ஐபோனை அறிமுகம் செய்தபோது கூறியது போல, அது ஒரு சாதனம் அல்ல, மூன்று சாதனங்களாக இருந்ததுதான். பாடல்களை கேட்பதற்கான இசை சாதனம், புரட்சிகரமான மொபைல் போன் மற்றும் இணையத்தை அணுக்ககூடிய கையடக்க சாதனம் என மூன்று சாதனங்கள் ஒன்றிணைந்த மாயம் என ஐபோனை ஜாப்ஸ் வர்ணித்திருந்தார். இந்த மூன்றும் தனித்தனி சாதனங்கள் அல்ல, ஒரே சாதனமாக இணைந்தவை என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.

அதன் பிறகு ஐபோன் இன்று, மூன்றல்ல, பத்துக்கும் மேற்பட்ட சாதனங்கள் இணைந்த ஒற்றை சாதனமாக உருவாகி இருப்பதாக மேக் அப்சர்வர் இணைய இதழ் பாராட்டுகிறது. உண்மைதான், ஐபோன் கையில் இருந்தால் ஒளிப்படங்களை எடுத்து தள்ளலாம், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம், ஸ்கேனிங் செய்யலாம், புத்தகம் வாசிக்கலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கு இது பொருந்தும் என்றாலும், போனில் இவை எல்லாம் சாத்தியம் என்று உணர்த்தியது ஐபோன் தான்.

உண்மையில் ஸ்மார்ட்போன் புரட்சியின் தொடக்கப்புள்ளியாக ஐபோன் அமைந்தது. ஐபோன் முதலில் அறிமுகமானபோது விசைப்பலகை என தனியே இல்லாதது ஒரு குறையாக கருதப்பட்டது. விசைப்பலகையும் இல்லாமல் ஸ்டைல்ஸ் போன்ற டிஜிட்டல் குச்சியும் இல்லாமல் போனின் சின்னஞ்சிறிய திரையில் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதிலாக, ஐபோனின் நேர்த்தியான ‘டச்’ ஸ்கிரீன் வழிகாட்டி நுட்பம் அமைந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பட்டன் எனும் குழப்பங்கள் எல்லாம் இல்லாமல், மையமான ஹோம் பட்டன், அதிலிருந்து தேவையான பகுதியை அணுகுவதற்கான வழிகாட்டி என ஐபோனின் பயணர் இடைமுகம் அத்தனை நட்பாக அமைந்திருந்தது. இந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட ஐபோன்கள் மேம்பட்டுக்கொண்டிருந்தன.

இன்று செயலிகள் கடை இல்லாமல் ஐபோனை கற்பனையே செய்ய முடியாது. ஆனால், ஐபோன் அறிமுகமான ஓராண்டுக்கு பின்புதான் அதன் அடையாளமான செயலிகள் மையமான ‘ஆப் ஸ்டோர்’ அறிமுகமானது. புதிய செயலிகளை உருவாக்க தனது தொழில்நுட்ப மேடை மென்பொருள் உருவாக்குனர்களுக்கு அகலமாக திறந்துவிட்டது. செயலிகள் சார்ந்த புதிய உலகை உருவாக்கியது. எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் விளம்பர வாசகமாக இருந்தாலும் ஸ்மார்ட்போன் உலகின் யதார்த்தமும் அதுதானே!.

அடுத்து வந்த மாதிரிகளில் ஆப்பிள் தொடர்ந்து புதுமைகளை புகுத்திக்கொண்டே இருந்தது. காமிராவின் துல்லியம் மேம்பட்டது. இணையதள வாசகங்களை நகலெடுத்து பகிரும் வசதி அறிமுகமானது. முதல் ஐபோனிலேயே இணையத்தை அணுகுவதற்கான பிரவுசர் அற்புதம் என்று பிரபல தொழிநுட்ப எழுத்தாளரும், விமர்சகருமான வால்ட் மாஸ்பர்க், ஐபோன் அறிமுகம் பற்றிய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மொத்தத்தில் ஐபோன், செல்போன் தொடர்பான பார்வை மற்றும் ஸ்மார்ட்போன் தொடர்பான கருதுகோள் இரண்டையுமே மாற்றியது. டெஸ்டாப் கம்ப்யூட்டருக்கு நிகரான ஆற்றல் கொண்ட சாதனத்தை சட்டை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு உலவலாம் என்ற தைரியத்தை ஐபோன் உருவாக்கியது. அதோடு எண்ணற்ற செயலிகள் மூலம் அந்த சாதனத்தின் பயன்பாட்டையும் அதிகமாக்கியது.

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், உபெர் என பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இணைய நிறுவனங்கள் எல்லாமே ஐபோனின் விளைவுதான். ஐபோன் தொழில்நுட்ப உலகில் மட்டும் மாற்றத்தை கொண்டுவரவில்லை. தனிநபர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் விதத்தையும் மாற்றியிருக்கிறது. காகித வரைபடங்கள், நாட்காட்டிகள், அலாரம் கடிகாரங்கள், டிஜிட்டல் காமிராக்கள் என பல விஷயங்களை தனது வாழ்க்கையிலிருந்து ஐபோன் மறையச்செய்துவிட்டதாக ‘தி வர்ஜ்’ இணைய இதழில் ஷனான் லியோ எனும் கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.

ஐபோன் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய விரிவான அலசல்களுக்கு நடுவே ஐபோன் உருவான வரலாறு தொடர்பான பின்னணி கதைகளும் சுவாரஸ்யத்தோடு விவரிக்கப்படுகின்றன. ‘ஒன் டிவைஸ், தி சீக்ரெட் ஹிஸ்டரி ஆப் ஐபோன்’ எனும் சமீபத்திய புத்தகம் ஐபோன் பின்னணி கதையைச் சுவைபட விவரிப்பதாக பாராட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு பில்லியன் எனும் மைல்கல்லை கடந்த ஐபோன் அடுத்த பத்தாண்டுகளில் எப்படி இருக்கும் என ஆருடம் சொல்லும் கட்டுரைகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஐபோனின் தாக்கம் அப்படி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x