Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM
இந்தியாவில் 8 முதல் 12 வயது வரையிலான 89 சதவீதம் குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அணுகுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இணையப் பயன்பாடு, சமூக வலைதளங்கள் போன்றவை குறித்து சமீப காலமாகப் பல்வேறு சர்ச்சைகளும் அவற்றைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் பிடியும் இறுகி வருகின்றன.
இந்நிலையில், பிரபல கணினி நிறுவனமான இன்டெல் அதன் சார்பு நிறுவனமான மெக்ஆஃபி மூலம் இந்தியாவில் குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினரின் இணையப் பயன்பாடுகள் குறித்து கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தியது. நாடு முழுக்க சுமார் 2,000 குழந்தைகளிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
ஆய்வு முடிவில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் 89 சதவீதம் குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் ஃபேஸ்புக் பார்ப்பதாகவும், 88 சதவீதம் குழந்தைகள் தங்களின் அந்தரங்க விஷயங்களையும், தங்களின் உண்மையான புகைப்படங்களையும் மற்றவர்களுடன் பகிர்வதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் 36 சதவீதம் குழந்தைகள் தங்களுக்கு அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்பு கொள்வதால் பல்வேறு அபாயங்களில் சிக்கிக் கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுப் பேசிய மெக்ஆஃபி நிறுவனத்தின் நுகர்வோர் சந்தையியல் இயக்குநர் மெலனி டூகா கூறியதாவது:
குழந்தைகளின் இணையம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அவை நல்லவையாக இருந்தாலும், தீயவையாக இருந்தாலும் பெற்றோர்களே பொறுப்பு. தங்கள் குழந்தைகள் சமூக வலைதளங்களில் யாருடன் எல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள், என்ன மாதிரியான விஷயங்களைப் பார்க்கிறார்கள் போன்றவற்றை எல்லாம் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். இணையத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், அதுபற்றி குழந்தைகளுக்கு அன்பாக எடுத்துச் சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அதே போன்று குழந்தைகள் முன்னால் பெற்றோர்களே தங்கள் கைப்பேசியிலோ, மடிக்கணினியிலோ சமூக வலைதளங்களை பார்ப்பது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். எனவே, இந்த வழக்கத்தைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT