Last Updated : 09 Jun, 2017 09:05 AM

 

Published : 09 Jun 2017 09:05 AM
Last Updated : 09 Jun 2017 09:05 AM

தளம் புதிது: வேலைக்கு ஆபத்தா?

தானியங்கிமயமாக்கலும், ரோபோக்களின் வருகையும் பல துறைகளில் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொள்ள போவது தொடர்பான கணிப்புகளும், ஆய்வறிக்கைகளும் எல்லோரது வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. ரோபோக்கள் பறிக்கக்கூடிய வேலைகள் பற்றிய பட்டியலும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், நம்ம துறையில் பாதிப்பு எப்படி இருக்கும் எனும் கவலை உங்களுக்கு இருந்தால் அதற்கான பதிலை அளிப்பதற்கென‌ ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

'வில்ரோபர்ட்ஸ்டேக்மைஜாப்' எனும் இந்த இணையதளத்தில் பயனாளிகள் தங்கள் துறையைச் சமர்ப்பித்தால், அந்தத் துறையில் ரோபோக்களால் வேலை இழக்கும் அபாயம் எந்த அளவு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒருவர் தான் பணியாற்றும் துறையைக் குறிப்பிட்டு அதற்கான வேலை இழப்பு அபாயம் குறித்த தகவலை அறியலாம். அல்லது போகிற போக்கில் ஏதேனும் ஒரு துறையைத் தேர்வு செய்து அதற்கான பாதிப்பையும் அறியலாம். வேலை இழப்பு அபாயத்தின் அளவு, வளர்ச்சி விகிதம், பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை, தானியங்கமயமாக்கலின் பாதிப்பின் அளவு உள்ளிட்ட தகவல்கள் காண்பிக்கப்படுகின்றன.

2013ல் காரல் பெனிடிக்ட் மற்றும் மைக்கேல் ஆஸ்போர்ன், வேலைவாய்ப்பின் எதிர்காலம் எனும் தலைப்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கணினிமயமாக்கலால் ஏற்படக்கூடிய பணி இழப்புகள் குறித்து அலசியிருந்தனர். அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், வேலை இழப்பு அபாயத்தை உணர்த்தும் வகையில் இந்தத் தளம் அமைந்துள்ளது. மேலும் பல வேலைவாய்ப்பு கணிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமான கணிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் வருங்கால நிதர்சனத்தை உணர்த்தக்கூடிய எச்சரிக்கை மணியாக இந்தத் தளம் அமைந்துள்ளது.

இணைய முகவரி: >https://willrobotstakemyjob.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x