Published : 26 Aug 2016 01:03 PM
Last Updated : 26 Aug 2016 01:03 PM
பெட்டிக்கடை விற்பனையை நேரடியாக ஒளிபரப்புச் செய்யலாமா? அல்லது, திருநெல்வேலி அல்வா செய்யப்படும் காட்சியை நேரடி ஒளிபரப்புச் செய்வது பொருத்தமாக இருக்குமா?
‘இது எதுக்கு இப்போ?' என அலட்சியமாக நினைக்க வேண்டாம். இவை எல்லாம் நம் காலத்துக் கேள்விகள். இணைய நேரடி ஒளிபரப்புக்கு ஏற்றவை எவை என யோசிக்க வைக்கும் கேள்விகள்.
நேரடி ஒளிபரப்பு என்பது ஒரு காலத்தில் தொலைக்காட்சிகளின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆனால் இணையம் இதை மாற்றி இன்று யார் வேண்டுமானாலும் நேரடி ஒளிபரப்புச் செய்யும் வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. 'லைவ் ஸ்ட்ரீமிங்' என இது பிரபலமாகக் குறிப்பிடப்படுகிறது.
இணையத்தில் ‘லைவ் ஸ்ட்ரீமிங்' தொடர்பாக ஏராளமான வசதிகள் இருக்கின்றன. இவை தவிர ‘ஸ்ட்ரீமிங்' செய்வதற்கு என்றே பிரத்யேக சேவையான ‘ட்விட்ச்' தளம் இருக்கிறது. அமேசான் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தத் தளம், ‘வீடியோ கேம்' விளையாடுவதை ஒளிபரப்புவதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.
வீடியோ கேம் விளையாடுவதை எல்லாம் பார்த்து ரசிக்க முடியுமா என அப்பாவித்தனமாகக் கேட்க முடியாது. வீடியோ கேம்களைத் தனிப்பட்ட முறையில் விளையாடி ரசிக்கலாம் என்பதோடு, அவற்றில் மிகவும் சிக்கலான கேம்களைப் பார்வையாளர்கள் முன் ஆடிக்காட்டலாம். இந்த வகையான கேம்கள் ‘இ-விளையாட்டு' என தனிப் பிரிவாகவே உருவாகியிருக்கின்றன. இவை போலவே நுணுக்கமான வீடியோ கேம்களை ஆடிக்கொண்டே அதில் முன்னேறிச் செல்லும் லாவகத்தை ஒளிபரப்ப ‘ட்விட்ச்' வழி செய்கிறது. ஒரு முறை டிவிட்ச் தளத்தில் நுழைந்து பார்த்தால் இது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். நிற்க, ‘ட்விட்ச்' வீடியோ கேம் ஒளிபரப்பிற்காக அறியப்பட்டாலும், மற்ற பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ கேம் போலவே மற்ற செயல்களையும் டிவிட்சில் சேனல் அமைத்து நேரடியாக ஒளிபரப்பலாம். ஆனால், ‘ட்விட்ச்' ஒளிபரப்பிற்கு என்று விதிகள் இருக்கின்றன. அதில் எல்லோரும் ஒளிபரப்பு செய்துவிட முடியாது. ட்விட்ச்சில் எதை எல்லாம் ஒளிபரப்பு செய்யலாம், எவற்றை எல்லாம் ஒளிபரப்பக் கூடாது எனப் பெரிய பட்டியலே இருக்கிறது.
ஓவியம் வரைதலை, நகை செய்வதை, நாவல் எழுதுவதை, வீடியோ எடிட்டிங்கை ஒளிபரப்பலாம். ஆனால், வீட்டு வேலை செய்வதை, அறைகலன்களை அடுக்குவதை, மொழிப் பாடங்களை ஒளிபரப்ப அனுமதி இல்லை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்றால், படைப்பாற்றல் மிக்கதாக இருந்தால் ட்விட்ச்சில் ஒளிபரப்பலாம். அதற்கு மாறாக சுவாரஸ்யம் இல்லாமல் அலுப்பூட்டக்கூடிய செயல்கள் என்றால் அனுமதி இல்லை என்று ட்விட்ச் விதிகள் கூறுகின்றன.
இந்த வேறுபாட்டை இன்னும் கச்சிதமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒளிப்படங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 'போட்டோஷூட்' எனப்படும் ஒளிப்படங்களை எடுக்கும் நிகழ்வை ட்விட்சில் பகிர அனுமதி இல்லை. ஆனால் ஒளிப்படங்களைத் திருத்தி மேம்படுத்தும் 'போட்டோ எடிட்டிங்'கை ஒளிபரப்பலாம். ஒளிப்படம் ஒரு கலையாக இருக்கலாம். ஆனால், ஒளிப்படம் எடுக்கும் செயல்முறை கலை அல்ல- குறைந்தபட்சம் ட்விட்ச் ஒளிபரப்பிற்கு ஏற்ற கலை அல்ல.
இதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால், அமெரிக்க ஒளிப்படக் கலைஞரான மைக் லாரேமோரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். கொலோராடோவைச் சேர்ந்த லாரேமோர் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் மட்டும் அல்ல, அவர் ஒரு ட்விட்ச் ஒளிபரப்பாளரும்கூட.
ஆம், லாரேமோர் தான் ஒளிப் படங்களை போட்டோஷாப் மூலம் மேம்படுத்துவதை ட்விட்ச் மூலம் அடிக்கடி நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறார். அவர் மெருகேற்றும் ஒளிப்படம் திரையில் போட்டோஷாப் சட்டகத்திற்குள் காட்சி அளிக்க, கீழே சிறிய பெட்டியில் லாரேமோர் தோன்றியபடி, ஒளிப்பட நுணுக்கங்களுக்கு விளக்கம் அளிப்பதைக் கேட்டபடி, ஒரு ஒளிப்படம் கேமரா காட்சியிலிருந்து முழுமையான படமாக உருமாறும் அற்புதத்தை அதன் அனைத்து நுணுக்கங்களுடனும் பார்வையிடலாம்.
இதை அவர் ‘போட்டோ ஸ்ட்ரீமிங்' எனக் குறிப்பிடுகிறார். இந்த நுணுக்கமான செயல்பாட்டை ட்விட்ச் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சுவாரஸ்யமானதாக இருக்கிறது என்கிறார் அவர்.
பார்வையாளர்கள் கேட்கும் ஒளிப்படம் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ட்விட்ச் நெறிமுறைகள்: > https://help.twitch.tv/customer/portal/articles/2176641-creative-faq
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT