Published : 10 Mar 2017 11:23 AM
Last Updated : 10 Mar 2017 11:23 AM
இணையத்தின் ‘டாப் டென்’ பிரச்சினைகளைப் பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நியூஸ் போன்ற புதிய பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், டிரால்கள் எனப்படும் இணைய விஷமிகளின் தாக்குதல் இணையத்தின் தீராத தலைவலியாகத் தொடர்கிறது.
இணையத்தின் ஆதிகாலப் பிரச்சினையான இதற்குப் பலவிதத் தீர்வுகள் முயற்சிக்கப்பட்டு, எதுவும் முழுமையான பலன் தராத நிலையில் நார்வே நாட்டு இணையதளம் ஒன்று புதிய தீர்வை முன்வைத்துள்ளது. இந்தத் தீர்வு புதுமையாக மட்டுமல்ல; புதிர் வடிவிலும் அமைந்துள்ளது. அதாவது கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ளது.
தூண்டுவதே நோக்கம்
டிரால்களுக்குப் பலவிதமான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. அதற்கேற்ப டிரால்களும் பலவிதமான வடிவில் செயல்பட்டுவருகின்றன. ஆனால், டிரால்களின் பொதுத்தன்மை என்று பார்த்தால் இணைய விவாதம் போன்றவற்றில் சம்மன் இல்லாமல் ஆஜராகி துவேஷம் நிறைந்த கருத்துகளைப் பதிவு செய்வது எனப் புரிந்துகொள்ளலாம். விவாதத்தின் நோக்கத்தைப் பாதிப்பதில் தொடங்கி, தொடர்புடையவர்கள் மனதை நோகடிப்பதுவரை இது அமையலாம்.
இத்தகையத் தாக்குதலுக்கு இலக்காகி இணையப் பக்கமே இனி வர மாட்டேன் எனக் கண்ணீர் மல்க விலகிய பிரபலங்கள் உண்டு. அண்மைக் காலமாக, சாமானியர்களும் இந்த வகைத் தாக்குதலுக்கு இலக்காகி அவதிப்பட்டு வருகின்றனர்.
சுருக்கமாகச் சொல்வதானால் இணைய விஷமிகள் இணையத்தைப் பாதுகாப்பற்ற இடமாக மாற்றி வருகின்றனர். இவ்வளவு ஏன், செய்தித் தளங்களிலும்கூட டிரால்கள் தொடர்ந்து கைவரிசை காட்டிவருகின்றன. செய்திக் கட்டுரைகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பின்னூட்ட வசதியைத் தவறாகப் பயன்படுத்தி மனம் போன போக்கில் கருத்துகளைப் பதிவு செய்து வெறுத்துப்போக வைப்பதில் விஷமிகள் ஆனந்தம் காண்கின்றனர்.
சுருக்கமாகச் சொல்வதானால் இணைய விஷமிகள் இணையத்தைப் பாதுகாப்பற்ற இடமாக மாற்றி வருகின்றனர். இவ்வளவு ஏன், செய்தித் தளங்களிலும்கூட டிரால்கள் தொடர்ந்து கைவரிசை காட்டிவருகின்றன. செய்திக் கட்டுரைகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பின்னூட்ட வசதியைத் தவறாகப் பயன்படுத்தி மனம் போன போக்கில் கருத்துகளைப் பதிவு செய்து வெறுத்துப்போக வைப்பதில் விஷமிகள் ஆனந்தம் காண்கின்றனர்.
சிலர் வம்புக்காகவேனும் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவித்துக் கோபப்பட வைப்பதும் உண்டு. ஏதேனும் ஒரு விதத்தில் தூண்டிவிடுவதுதான் அவர்களின் நோக்கம்!
பின்னூட்டங்களில் இப்படிக் காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்துகள் பதிவு செய்யப்படுவதைத் தவிர்க்கக் கண்காணிப்பு, கட்டுப்பாடு போன்ற உத்திகள் எல்லாம் பலன் தராமல் போகவே, பல இணையதளங்கள் பின்னூட்ட வசதியையே ரத்து செய்துவிட்டன. ஆனால், பின்னூட்டம் என்பது இணையம் சாத்தியமாக்கும் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் என்பதால் இந்த உத்தியையும் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கில்லை. மேலும் பின்னூட்ட வசதி அர்த்தமுள்ள விவாதம் மூலம் கருத்துப் பரிமாற்றம் மற்றும் கூடுதல் புரிதலுக்கு வழிவகுக்கும்.
வழிகாட்டும் நார்வே
எனவேதான், பின்னூட்ட வசதி இயன்ற வரை ஆரோக்கியமான முறையிலேயே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது எப்படி எனப் பலரும் யோசித்துவருகின்றனர். இந்த வரிசையில்தான் நார்வே நாட்டு பொதுத்துறை ஒளிபரப்பு ஊடகமான என்.ஆர்.கே.யின் தொழில்நுட்பப் பிரிவான என்.ஆர்.கே. பீட்டா பின்னூட்டங்களை நெறிப்படுத்தப் புதிய தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தீர்வு கேள்வி பதில் பாணியில் அமைந்துள்ளது.
அதாவது, குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரை தொடர்பாக யாரேனும் பின்னூட்டம் வெளியிட விரும்பினால் முதலில், சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் பின்னூட்டம் அளிக்க விரும்பும் கட்டுரை தொடர்பாக அந்தக் கேள்விகள் அமைந்திருக்கும். அவற்றுக்குச் சரியான பதில் அளித்தால் மட்டுமே பின்னூட்டம் பதிவு செய்ய முடியும்.
அதாவது, குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரை தொடர்பாக யாரேனும் பின்னூட்டம் வெளியிட விரும்பினால் முதலில், சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் பின்னூட்டம் அளிக்க விரும்பும் கட்டுரை தொடர்பாக அந்தக் கேள்விகள் அமைந்திருக்கும். அவற்றுக்குச் சரியான பதில் அளித்தால் மட்டுமே பின்னூட்டம் பதிவு செய்ய முடியும்.
பெரும்பாலும் இணைய விஷமிகள் செய்திகளைப் படிக்காமலேயே பின்னூட்டத்தில் துவேஷ கருத்துகளைக் கூறி கசப்புணர்வு அளிக்கின்றனர் எனக் கருதப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், முதலில் கருத்து சொல்ல விரும்புகிறவர்கள் அது தொடர்பான கட்டுரையைப் படித்திருப்பதை உறுதி செய்ய இந்தக் கேள்வி பதில் உத்தி முயற்சிக்கிறது.
“கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா? எனில் இது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள். கருத்துகளின் தரம் குறித்துக் கவலைப்படுவதால், பின்னூட்டம் அளிப்பவர்கள் அது தொடர்பான செய்தியை வாசித்திருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என இதற்கான காரணம் அந்த இணையதளம் சார்பாக விளக்கப்பட்டுள்ளது.
கருத்துத் தெரிவிப்பதற்கு முன், எல்லோரும் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்கள் எனில், அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அர்த்தமுள்ளதாக அமைய வாய்ப்புள்ளது என ‘என்.ஆர்.கே பீட்டா’ தளத்தில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இது தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.
நிச்சயம், பின்னூட்ட வசதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் போராட்டத்தில் இது சுவாரசியமான முயற்சிதான். பின்னூட்டம் மூலம் விஷம் கக்குவதை இது தடுக்குமா என்று தெரியவில்லை. ஆனால், கருத்து தெரிவிக்கவுள்ள ஒரு கட்டுரையை முழுவதும் படித்து, அதன் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு பதில் அளிக்க நிர்பந்திக்கப்படுவது போகிற போக்கில் கருத்துகளை வீசி எறிவதில் இன்பம் காண்பவர்களை யோசிக்க வைக்கலாம். அல்லது குறைந்தபட்சம் விலக்கி வைக்கலாம். மேலும் இடைப்பட்ட நேரத்தில் அவர்களின் ஆவேசத்தையும் தணித்துவிடலாம்.
ஆனால், கட்டுரையின் உண்மையான வாசகர்கள் இப்படிக் கேள்வி கேட்கப்படுவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. கட்டுரை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை அவர்கள் ரசிக்கவும் செய்யலாம். எனில் இது, இணைய யுகத்தில் செய்திகள் தொடர்பான உரையாடல் தன்மையில் கூடுதல் அம்சமாகலாம். வாசித்த பிறகே பின்னூட்டம் தெரிவிக்க வழி செய்யும் இந்த உத்தி அர்த்தமுள்ள இணைய விவாதத்திற்கு வழி செய்யலாம் என்று இணைய வல்லுநர்கள் தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT