Last Updated : 26 May, 2017 10:13 AM

 

Published : 26 May 2017 10:13 AM
Last Updated : 26 May 2017 10:13 AM

எம்பி 3-க்கு என்ன ஆச்சு?

பிரபலமான இசைக் கோப்பு வடிவமான எம்பி3 தொடர்பாகச் சமீபத்தில் வெளியான செய்தி இணையவாசிகளையும் இசைப் பிரியர்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கும். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் இசைப்பிரியர்கள் எம்பி3 வடிவத்துக்கு விடை கொடுக்க நேருமோ என நினைத்து நொறுங்கிப்போயிருக்கலாம். ஆனால், இந்தக் கவலை தேவையற்றது என்பதை ‘இல்லை,எம்பி3 இறக்கவில்லை!’, ‘எம்பிஎ இறந்துவிட்டது, ஆனால் எம்பி3 நீடூடி வாழ்க!’ போன்ற தலைப்பிலான விளக்கச் செய்திகள் புரியவைத்தன.

எம்பி3 இசைக் கோப்பு வடிவத்தை உருவாக்கிய ஜெர்மனி ஆய்வு அமைப்புக்குப் பின்னே உள்ள பாரன்ஹோபர் கழகம் வெளியிட்ட அறிவிப்பே அதிர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. எம்பி3 கோப்பு தொடர்பான காப்புரிமை சார்ந்த உரிமம் வழங்குவதை நிறுத்திக்கொள்வதாகவும், எம்பி3 வடிவம் நுகர்வோர் மத்தியில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், அதைவிட மேம்பட்ட கோப்பு வடிவங்களான ஏஏசி போன்றவை எம்பி3யைவிட அதிக ஒலித்தரத்தை அளிக்க வல்லவை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புதான், எம்பி3 கொல்லப்படுகிறது எனும் தலைப்புடன் வெளியானது. ஆனால், எம்பி3-க்கும் ஒன்றும் ஆகவில்லை. எம்பி3 பாடல்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை. கோப்பு வடிவில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஜெர்மனி அமைப்பு போன்றவை மேம்பட்ட இசைக் கோப்பு வடிவமான ஏஏசி போன்றவற்றை முன்னிறுத்துகின்றன என்பதும் உண்மைதான். ஆனால், அதனால் எம்பி3க்கு அதிகப் பாதிப்பில்லை. அது பயன்பாட்டில் தொடரும். அதில் பாடல்களைக் கேட்கலாம்.

ஏனெனில், ஜெர்மனி அமைப்பு எம்பி3-க்கான உரிம ஒப்பந்த முறையைத்தான் கைவிட்டுள்ளது. ஏற்கெனவே எம்பி3 கோப்பு வடிவம் தொடர்பான காப்புரிமை காலாவதியாகிவிட்ட நிலையில், இதற்கான உரிம ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளது. இதன் பொருள் எம்பி3 கோப்பு உருவாக்கத்துக்கு இனி எந்த நிறுவனமும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதாகும். மேம்பட்ட வடிவத்துக்கு மாறுவதால் ஜெர்மனி அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால், அதற்காக இசைப் பிரியர்களும் இந்த மேம்பட்ட முறைக்கு மாறியாக வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. அவர்கள் பழகிய எம்பி3 வடிவத்தையைப் பயன்படுத்தலாம். அது மட்டுமல்ல; இந்த முறையில் பாடல்களை உருவாக்க இனிக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதால், சுதந்திரமாகச் செயல்படலாம்.

புதிய இசைக் கோப்பு வடிவமான அட்வான்ஸ்டு ஆடியோ கோடிங் எனப்படும் ஏஏசி, எம்பி3 இடத்தில் அதன் பிரம்மாக்களால் முன்னிறுத்தப்பட்டாலும், இசைத் துறை ஒரே நாளில் எம்பி3-யிலிருந்து மாறிவிடும் என எதிர்பார்ப்பதற்கில்லை. தற்போதே இசை ஸ்ட்டீரிமிங் சேவையில் ஏஏசி முறை பின்பற்றப்பட்டாலும்கூட, எம்பி3 அவ்வளவுதான் எனச் சொல்ல முடியாது என்றே கருதப்படுகிறது.

ஏன் என்பதைப் புரிந்துகொள்ள எம்பி 3 வரலாற்றைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்க்கலாம். எம்பி3 என்பது உண்மையில் ஒலிகளுக்கான கோப்பு வடிவம். எம்பெக் ஆடியோ லேயர் 3 என்பதைக் குறிக்கும் இந்த வடிவம் ஒலிக் குறிப்புகளை அவற்றின் மூல அளவைவிடப் பத்து மடங்குக்கும் குறைவான அளவில் சுருக்கிச் சேமித்துவைத்துப் பகிர்ந்துகொள்ள வழிசெய்கிறது. அளவு சுருங்கினாலும் ஒலியின் தரம் பெரிய அளவில் பாதிக்காது. எனவே, இந்த முறையில் இசையைச் சேமிப்பதும், பரிமாற்றம் செய்வதும் எளிதானது. குறைந்த இடத்தில் அதிக அளவில் பாடல்களைப் பதியலாம் என்பதோடு, குறைவான நேரத்தில் பரிமாற்றமும் செய்யலாம். இந்த இரண்டும் சேர்ந்துதான் இணையத்தை இந்தக் கோப்பு வடிவத்துக்கு நெருக்கமாக்கியது.

எம்பி3 கோப்பு வடிவத்தை உருவாக்கும் முயற்சி 1980-களில் தொடங்கப்பட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாக இதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1990-களின் மத்தியில் பலன் அளித்தது. ஜெர்மனியைச் சேர்ந்த பரன்ஹோபர் கழகம் (Fraunhofer Institute) 1987-ல் இதற்கான பணியை முழு மூச்சில் தொடங்கியது. இந்த ஆய்வில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் பிராண்டன்பர்க் (Brandenburg) எம்பி3-யின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

பிராண்டன்பர்க் ஒலிக் குறிப்புகளைப் பல அடுக்குகளாகப் பிரித்து அவற்றைச் சுருக்குவதற்கான வழி தேடினார். 1980-களின் மத்தியில் அறிமுகமான மேம்பட்ட திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் இந்தச் சோதனையில் உதவின. மனித செவி பேச்சைக் கேட்கும்போதும் சரி, இசையைக் கேட்கும்போதும் சரி, முழுவதும் கேட்பதில்லை. பலவற்றைக் கேளாமல் விட்டுவிடுகிறது. அதாவது மனித செவியால் உணர முடியாத அலைவரிசை கொண்ட ஒலிக் குறிப்புகளும் இருக்கின்றன. இவற்றை நாம் கேட்பதேயில்லை.

மனித செவித்திறனில் உள்ள இந்த வரம்பை பிராண்டன்பர்க் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, செவியால் கேட்க முடியாத ஒலிக் குறிப்புகளைத் தேவையில்லாதவை என நீக்கிவிடும் வகையில் ஒரு முறையை உருவாக்கினார். இதனால் மூல இசை வடிவை அதன் தன்மை பாதிக்காமல் பத்தில் ஒரு மடங்காகச் சுருக்க முடிந்தது.

இதை அடிப்படையாகக் கொண்டே எம்பி3 கோப்பு வடிவம் அறிமுகமானது. 1990-களின் பின் பகுதியில் இணையப் பயன்பாடு அதிகரித்தபோது இணையம் எம்பி3 கோப்பு வடிவத்தை ஆரத் தழுவிக்கொண்டது.

இதன் பின் நிகழ்ந்தவையே பெரிய வரலாறு என்றாலும், அவற்றைச் சுருக்கமாக இப்படிப் புரிந்துகொள்ளலாம்: இசையை எம்பி3 வடிவத்துக்கு மாற்ற ஒரு என்கோடிங் முறை தேவை. அதற்கான உரிமத்தை இந்த நுட்பத்துக்கான ஆய்வுக்கு நிதி அளித்த ஜெர்மனி அமைப்பு வைத்திருந்தது. இப்படி மாற்றப்பட்ட கோப்புகளை இசையாக மாற்றவும் ஒரு சாதனம் தேவை. இதுதான் எம்பி3 பிளேயராக அறிமுகமானது. அதற்கு முன் டெஸ்க்டாப்பில் இதைச் சாத்தியமாக்கும் வின் ஆம்ப் மென்பொருள் அறிமுகமானது. அதற்கும் முன்னர் இணையவாசி ஒருவர், எம்பி3 கோப்பு முறை மாற்ற நுட்பத்தைத் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டுவிட்டார். இதன் பிறகு ஜெர்மனி அமைப்பு உரிமக் கட்டணத்தைக் குறைத்தது (இந்த உரிம ஒப்பந்தத்தைத்தான் இப்போது கைவிட்டுள்ளது).

இவை எல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்த நிலையில், இசையை எம்பி3 வடிவில் பரிமாறிக்கொள்வது பிரபலமாகி இணைய இசை உலகைப் புரட்டிப்போட்டது.

இந்த வடிவம் அத்தனை சீக்கிரம் காலாவதியாகாது என்றே தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

எம்பி3 அதிகாரப்பூர்வ வரலாறு: >https://www.mp3-history.com/

சுருக்கமான வரலாறு: >http://www.npr.org/sections/therecord/2011/03/23/134622940/the-mp3-a-history-of-innovation-and-betrayal

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x